Sunday, March 13, 2022

5 கவிதைகள்

வெளி "ஆகுக!"

"குன் " என்றதும்
முதலில் வெளியானது
"வெளி" யா?

வெளியானதால்தான்
"வெளி" என்றானதா.?
அமா எனும் இருளில் இருந்து
"வெளி"ச்சத்துக்கு வந்ததால்
அது பெருவெளி ஆனதோ..?

வெளியில் இருந்து கொண்டு
வெளியை காணுதல் கூடுமோ.?
வெளிக்கப்பாலும்
செல்லக் கப்பலும் உண்டோ..?

தீராவெளி தேடிச்
சிறு வெளிச்சம் கொளுத்தி ஒரு
மின்மினிப் பூச்சி
வெளிஇறங்கித் தேடும் போது
அதன்மீது
வெளி இரங்கிச் சொன்னது

முதலில்
வெளிமனதில் உள்ளதை
வெளியாக்கு..
பின்னர்
உள்மனதில்
அது வெளி ஆகும்.

00


பிரிதலின் நிலை


ஒளு செய்யும் போதே
ஓருயிர் பிரிவதுண்டு
தக்பீர் கட்டியதும்
தடாலென விழுந்து
தவித்துச் சில போவதுண்டு

ருக்குஹ் செய்த நிலையில் கூட
ரூஹு பிரிவதும் கண்கூடு.
நடு இருப்பில் வர
நல்லாத்மா கழன்று விழுவதுமுண்டு

எந்நிலையில்
எவர் உயிர்
எவ்விதம் பிரியுமோ
எவ்விடம் போகுமோ..

ஆயின்,
சுஜூதில் விழுந்து
சிரவணக்கம் செய்யும் போதென்
சீவன் போகச் செய்குவையோ..?

00


இடது கைப்பட்டோலை


ஒன்று விடாமல்
றகிப் அதித் வரைந்த வரலாறு
எப்படி வாசிக்க...

எத்தனை அத்தியாயங்கள்...
எத்தனை அநியாயங்கள்...

மீசானில் போடத்
தீமைத்தட்டு
தரையில் தட்டிற்று..

கதறிக் கத்திக்
குளறும் போதிலே..,
இழிந்த இந்த மானுடம்
தெரிந்தோ என்னவோ
மொழிந்திருந்த ஒரு கலிமாப்
பொழிந்திருந்த பக்கத்தைப்
போட்டதும்,

ஆ..
தீமைத்தட்டு உயர்ந்தது
நன்மைத்தட்டு தாழ்ந்தது
கருணையின் வாசல்
திறந்தது.

கடவுளின் தரிசனம் கிடைத்தது..

00

நிறுத்தற்குறி.

சிறகடித்துக் குதிக்கிறது
இந்தச் சொல்
என்னை எடுத்து ஒரு
கவிதை எழுதிக் கொள் என்று...

ஏற்கனவே
வண்ணத்துப் பூச்சியின்
இறக்கைகளில்
எழுதியவை எல்லாம்
எங்கோ பறந்து விட்டன..

நான் எழுதிய
வானத்தைச்சுருட்டி
காது குடைகிறேன்

அதில் எழுதிய
என் இள மைப்பேனா
உலர்ந்து விட்டது..

அறுபது பக்கம் வரை
என்னை வாசித்த அலுப்பில்
மூடி ஒரு
மயானத்தின் மூலையில்
தூக்கி எறியக்
காலமும் முடிவு செய்த பின்னே

இனியும்
எதை எழுத...
யார் வாசிக்க....?

00


ஒரத்த பெருமஹா நொக்கு



பகளியில அடுக்கின
தல வெத்தில போல
மொகம்வாய்ச்சிருக்கி ண்டு
என்ன நடப்புஹா நொக்கு

கொளுந்தண்டு போல
மூக்கு வளைஞ்சிருக்கே
அந்தக் கெப்பரு நொக்கு

கொட்டப்பாக்கு போல ரெண்டு
கண்ணும்...அது
வெட்டி வெட்டி முழிச்சா
பாக்குச் சீவல் போல இருக்கு
ண்டு ஒரத்த பெரும நொக்கு

சுண்ணாம்புட கலருள
பல்லு பளீரெண்டு
தொலங்குது ண்டு ஒரு எடுப்பு

சப்பித் துப்பின சாறு போல
செவத்த ஒதடு இருக்கி ண்டு
ஒரமா இருக்கி பெரும

கண்ணுல பொயில வெச்சிக்
கிறுகிருக்க வெக்கிறம்
ண்டு ஒரு தும்ரு

ஏலக்காயும் சேத்துச் சப்பினாப்போல
கமகமக்கிற வாயி
எல்லாஞ் சேர்ந்து
என்ன ஒரத்த
பெருமஹா நொக்கு

பொறு..பொறு
ஒருநாளக்கி ஒன்னச்
சப்பித் துப்புவன் பாரு...

00