Wednesday, February 7, 2024

மேய்ச்சல் வெளி

 

மேய்ச்சல் வெளி

 

என்னுடைய கழுதைகள்

எங்கெல்லாமோ

மேய்ச்சலுக்குச் செல்கின்றன..

பிரபஞ்சம் முழுக்க

அலைகின்றன..

பிடித்தமானதை சப்பிச் சப்பி

அசை போடுகின்றன

கசப்பானதைக்

கடித்துக்

கடிதில் துப்பி விடுகின்றன..

இவற்றை

அடக்கி வைப்பது

ஆகப் பெரும் கஷ்டம்

ஆயிரமாயிரமாய்

குட்டியீன்று பெருகிச்

செல்லும்

இந்த

நினைவுப் பெரும் கழுதைகள்..

O

 

நேரலை

 

நேரலை

 

நேத்திரத்தில் நீர் வழிய

நேரலையில் பார்க்கின்றாய்,

நீ..

கண்ணாக வளர்த்த

வாப்பாவின்

கண்கள் மூடியிருப்பதை

உன்னைக் நீராட்டியவரின்

உடலை

யாரோ குளிப்பாட்டுவதை

தூக்கி வளர்த்தவரின்

ஜனாசாவை, யாரோ

தூக்கிச் சந்தூக்கில் வைப்பதை

தோளில் உன்னைச் சுமந்தவரை

யாரோ

தம், தோளில் சுமந்து செல்வதை..

நெஞ்சோடு அணைத்திருந்தவரின்

மஞ்சிப் பலகையை..

இன்னும்

மீசான் கட்டைகளையும்..

யாரோ வெட்டிய குளிக்குள்

அவரை இறக்கி வைப்பதை

யார் யாரோ

மண் எறிந்து மூடுவதை...

யாரோ ஒருத்தனைப் போல

நோர்வேயிலிருந்து,

நேரலையில்

பார்த்துக் கொண்டிருக்கிறாய்

அவர் மகன் நீ..

O

கவிதைப்பறவை

 

கவிதைப்பறவை

 

நீ

என் கவிதைப்பறவை

நீ சிலிர்க்கும் போதெல்லாம்

உதிரும்

சொற்களைப் பொறுக்கித்

தினமொரு

கவிதை எழுதுகிறேன்

நீ

கொத்திக்கொத்திப் போடும்

எழுத்துக்களைக் கோர்த்து

ஒரு கவிதைக்கூடு செய்கிறேன்..

நீ

கொக்கரிக்கும் இசையில்

என் பாடல் விருது பெறுகிறது

என்னை உன்

இறகுகளுக்குள் அடைகார்த்து

கவிதைக்குஞ்சுகளைப்

பெற்றெடு..

வா

என் வாசலுக்கு

வந்து கூவு.

0

 

ஆதிச் சுழல்

ஆதிச் சுழல்

 

இந்த அந்தர வெளியில்

இந்தப் பம்பரத்தை

எறிந்ததுவும் ஆர்?

 

மறை கரம்

சொடுக்கி விட்ட

அதன் சூட்சுமக் கயிற்றில்

சுழலும்

கோடா கோடி ஆலங்களும்,

 

ஒரு விரல் நுனியில்

சுற்றி வரும் இரகசியத்தைச்

சொல்லித் தருவதுவும் யார்..

 

அந்தரத்தில் சுழலும்

வித்துவம்.. அது

சூஃபியின் தத்துவம்

 

அத்தஹியாத்தில்

சுட்டுவிரல்

அசையாதிருக்கும் போதில்

சுழற்சி நிற்கும்

சேதி வரும்..