Friday, May 13, 2022

மூஸாவின் ஆஸா

 மூஸாவின் ஆஸா

--------------------
யா மூஸாவே,
எங்கள் இறைதூதரே,
தங்கள் கைத்தடியைக்
கொஞ்சம் தருவீராயின்,
இம்மன்றத்துள் எறிந்து
இருநூறு பாம்புகளையும்
விழுங்கி விட...
தியவன்னா வாவியில்
அடித்து
இரண்டாகப் பிளந்து
இருநூறையும்
தள்ளிப் புதைக்க..
இருநூறு மந்தைகளையும்
ஆதம்மலை
உச்சிக்கு ஓட்டிச் சென்று
அங்கிருந்து தள்ளிவிட .
யா மூஸாவே,
எங்கள் இறைதூதரே,
தங்கள் கைத்தடியைக்
கொஞ்சம் தருவீராயின்.....
O
தீரன்....


யாஹூ5

 ஏகும் தலம்

➖➖➖➖
சாகுந்தலம் படைத்தவன்
போகுந்தலம்
நெருங்கும் நேரம் இது.
இனி
ஏகும் தலம்
ஏகி ஆவதென்ன..
நரக நெருப்பெனும்
வேகும்தலம் நோக்கிப்
போகும் தளம்
போவதுமுண்மை.
நோகும் பாவமெலாம்
ஒரு சொட்டுக் கண்ணீரில்
மாயும் மாயம் அறிவீரோ
அது
ஆகும் போது
உனதருட் காட்சி
காணும் வகை செய்வாயோ..
கண்ணே ரஹ்மானே..
0
✍️ தீரன்.

ஒளிமயம்
➖➖➖➖
பேரொளியியின் சந்நிதியில்
ஓரொளி
அது நூரொளி..
ஈரொளியும் நேரொளியாய்
நின்றொளிரக்
காணொளியில்
காண்பது போலக்
கண்ணொளிரக் கண்டது..
நூரொளியின் வருகையால்
பாரொளிர்ந்தது.
பாரொளிர்ந்ததால்
விண்வெளி முழுவதும்
முஹம்மதெனும் பேரொலித்தது..
0
✍️ தீரன்..

அகத் தீ
➖➖➖
கொழுத்திப் போட்டது
கொழுந்து விட்டெரிகிறது
தீபமாய் எரிந்தது,
தீப்பற்றிக் கொண்டது
சுடராய்த் தொடங்கியது
சூழ்ந்து பற்றிப்
பரவி விட்டது.
சில காலம்
நீறு பூத்திருந்தது
இன்று
நெருப்பாய் எரிகிறது
காழ்ந்து எரிந்து, மனக்
காடு முழுவதும்
கருகி விட்டது
தணியாமல்,
கனன்று கொண்டே இருக்கிறது,
உன்னைப்,'பற்றி'
என்னில் பற்றிய
நினைவுப் பெரு நெருப்பு.
0
✍️தீரன்

வக்கிர வதை
➖➖➖➖➖
வெட்டிய மின்னலை
விழிகளில் ஏந்துகிறேன்
கொட்டிய நெருப்பினை
கொதிப்புடன் விழுங்குகிறேன்
திட்டிய மொழியெல்லாம்
திகைப்புடன் சகிக்கின்றேன்
முட்டிய மோதலை
முழுதாய் தாங்குகிறேன்
குட்டிய போதெல்லாம்
குனிந்தே இருக்கிறேன்
எட்டியவள் உதைத்த போது
எல்லாம் வாங்குகிறேன்
வெட்டிய கபுருக்குள்
வைக்கும் நேரமிதோ
யானறியேன்..
0
✍️ தீரன்..

சாக்கணம்
➖➖➖➖
இக்கணமே வருக
இஸ்ராயீலே,
கொத்தித் தின்கிறது
கொடும் கழுகு ஒன்று
அண்டம் முழுக்க
கத்திக் கலைக்கிறது
அண்டங்காகம்
விரட்டிக் கடிக்கிறது
விசர் நாய் ஒன்று
புரட்டிப் போட்டுப்
பிடுங்கி எடுக்கிறது புலி
சீறிப் படமெடுத்து
ஊறிய விஷத்தை
உயிரில் துப்புகிறது நச்சரவம்
இன்னும்,
எத்தனை காலம்
இத்தனை கொடுமை..
இக்கணமே வருக
இஸ்ராயீலே....
0
✍️தீரன்...

யாஹூ-5

 


முற்றும்
∞∞∞∞∞

விடிந்து விட்டது
இனி
விளக்கை அணை.

ஒடிந்து விட்டது
ஒட்டுவதற்கில்லை,
ஜீவநீர்,
வடிந்து விட்டது
விழியை மூடு.

இடிந்து விட்டது
இணக்க முடியாது..
நிரந்தரமாய்ப் 
படிந்து விட்டது
பறக்க இயலாது

மடிந்து விட்டது
மண்ணைப் போடு-இடுப்
பொடிந்து விட்டது
இருகை ஏந்து 

எல்லாம்,
முடிந்து விட்டது
மூட்டையைக்  கட்டு..
0
✍️தீரன்
ஒடுங்கியிருத்தல்..
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
பறந்து விடாதே
என் பட்டாம்பூச்சியே..
உள்ளங்கையில்
நீ எழுதும் ஒரு கவிதை..
எனக்குச் சில
உண்மைகளை சொல்கிறதே..
அற்பப்
புழுவாக இருந்தாய்
கூட்டுக்குள்ளே சிலகாலம்
ஆன்மத் தவமிருந்தாய்
வர்ண வரம் பெற்று
வெளிவந்து சிறகடித்தாய்
இழி பிறவி நானும்
இருட் குகையில் போயிருந்து,
இறைதுதித்தொருநாளில்,
வர்ணச் சிறகுகள் பெறுவேன்
வந்துன்
வாசலில் வட்டமடிப்பேன்..
0
✍️தீரன்..


திருக்கோலம்
-----------
வானில் பறந்ததெல்லாம்
சும்மா
வீணில் பறந்ததுவா..
கானில் காண்பதெல்லாம்
கணத்தில்
காணாமல் போவதும்தான்
தூணிலும் துரும்பிலும்
ஆணிலும் பெண்ணிலும்
மறைந்தொரு நாடகம் நானிலத்தில் நாடுவதுமேன்..
ஏனிந்தக் கோலம்
எடுத்தாடும் திருக்கோலம்...
தன்னில் தனக்காய்த்
தானாடும் தன்மையுமேனோ..
அருளன்பு கனிந்தருளத்
தானிந்தக் கூத்தெல்லாம்..
O
✍️தீரன்..\

படிமுறை
................
முறைப்படி
ஏணிப்படி ஏறாமல்
ஏனிப்படி ஆனேன்.?
படிப்படியாய் ஏறியிருப்பின்
உருப்படியாய்
ஏறும்படி இருந்திருக்கும்
படிதாண்டித்
தப்படி வைக்கப்
படி தவறித்
தவறும்படி ஆனதெப்படி..
இப்படி இந்த
விதிப்படி செல்லாது,
செப்படி வித்தைச்
செல்படியாகுமோ..
நல்லபடி சொன்ன
சொற்படி ஏறாதிப்படி
விழும்படி ஆயிற்று..
இனி
எப்படி ஏற...?
O
✍️தீரன்

இரவின் விடுதலை
°°°°°°°°°°°°°°°°°°°°°°
எந்த ரொட்டியில்
யாருடைய பெயரோ..
ஆன்ம விருட்சத்திலிருந்து
ஆருடைய சருகு
உதிருமோ
ஆருடைய ஓலை
துளிர்த்தெழுமோ..
உன்னுடைய அரிசி
உண்டு முடியுமோ
அவனுடைய அர்ஷில்
அடைக்கலம் கிடைக்குமோ
மண்ணுக்கு வருவதும்
விண்ணுக்குப் போவதும்
எழுதித் தீர்க்கும்
இந்த இரவில்,
எனக்காக
போட்ட ரொட்டி
பிளந்து விடுமோ...?
0
✍️ தீரன்..