Wednesday, May 28, 2025

பயணியின் பாடல்

 பயணியின் பாடல்

==============
தருவே,
நீ
தருகின்ற நிழலில்
தரித்து நிற்கின்றேன்
தற்காலிகமாக
விருட்ஷம் நீ
வெயிலில்தான்
விரிகுடையாக நிற்கின்றாய்
பயணி நான்
சற்று வெயில் சாய்ந்ததும்
சென்று விடுவேன்
நிரந்தரமாகத்
தங்க வரவில்லை
நிழல் தந்த உனக்கு நன்றி.
தொலைதூரப் பயணிகளும்
தொடர்ந்து வருவர்
தொல்லை என எண்ணாது
தொடர்கிறாய் உன் சேவையை
தகிக்கும் இந்த தணலில்
நிற்கும் உனக்கு நிழல்
தருவது யார் தருவே...
O
தீரன்

உதிர் காலம்

உதிர் காலம்
===========
முற்றத்தில் நிற்கிறேன்
இனி
முறிந்து விடுவேன்..
முதிர்காலம் இது
இலை உதிர்காலம்
எதிர்காலம் இனியேது
சுற்றமெல்லாம் செல்லரித்து
இற்றுப் போய் நிற்கிறேன்.
என் நிழலில்
இளைப்பாறியவர்கள் எங்கே?
என் கிளைகளில்
பாடி ஆடிய பறவைகள் எங்கே?
ஆணி வேர் அறுந்து
கூனி நிற்கிறேன்
கூப்பிட ஆருமில்லை..
பட்ட மரம் தன்னைக்
கட்டியணைத்து ஒரு
சொட்டுக் கண்ணீர் மல்கி
முத்தமிட யாருளர்?
முற்றத்தில் நிற்கிறேன்..
இனி முறிந்து விடுவேன்..
O

தீரன்..