Wednesday, February 7, 2024

மேய்ச்சல் வெளி

 

மேய்ச்சல் வெளி

 

என்னுடைய கழுதைகள்

எங்கெல்லாமோ

மேய்ச்சலுக்குச் செல்கின்றன..

பிரபஞ்சம் முழுக்க

அலைகின்றன..

பிடித்தமானதை சப்பிச் சப்பி

அசை போடுகின்றன

கசப்பானதைக்

கடித்துக்

கடிதில் துப்பி விடுகின்றன..

இவற்றை

அடக்கி வைப்பது

ஆகப் பெரும் கஷ்டம்

ஆயிரமாயிரமாய்

குட்டியீன்று பெருகிச்

செல்லும்

இந்த

நினைவுப் பெரும் கழுதைகள்..

O

 

நேரலை

 

நேரலை

 

நேத்திரத்தில் நீர் வழிய

நேரலையில் பார்க்கின்றாய்,

நீ..

கண்ணாக வளர்த்த

வாப்பாவின்

கண்கள் மூடியிருப்பதை

உன்னைக் நீராட்டியவரின்

உடலை

யாரோ குளிப்பாட்டுவதை

தூக்கி வளர்த்தவரின்

ஜனாசாவை, யாரோ

தூக்கிச் சந்தூக்கில் வைப்பதை

தோளில் உன்னைச் சுமந்தவரை

யாரோ

தம், தோளில் சுமந்து செல்வதை..

நெஞ்சோடு அணைத்திருந்தவரின்

மஞ்சிப் பலகையை..

இன்னும்

மீசான் கட்டைகளையும்..

யாரோ வெட்டிய குளிக்குள்

அவரை இறக்கி வைப்பதை

யார் யாரோ

மண் எறிந்து மூடுவதை...

யாரோ ஒருத்தனைப் போல

நோர்வேயிலிருந்து,

நேரலையில்

பார்த்துக் கொண்டிருக்கிறாய்

அவர் மகன் நீ..

O

கவிதைப்பறவை

 

கவிதைப்பறவை

 

நீ

என் கவிதைப்பறவை

நீ சிலிர்க்கும் போதெல்லாம்

உதிரும்

சொற்களைப் பொறுக்கித்

தினமொரு

கவிதை எழுதுகிறேன்

நீ

கொத்திக்கொத்திப் போடும்

எழுத்துக்களைக் கோர்த்து

ஒரு கவிதைக்கூடு செய்கிறேன்..

நீ

கொக்கரிக்கும் இசையில்

என் பாடல் விருது பெறுகிறது

என்னை உன்

இறகுகளுக்குள் அடைகார்த்து

கவிதைக்குஞ்சுகளைப்

பெற்றெடு..

வா

என் வாசலுக்கு

வந்து கூவு.

0

 

ஆதிச் சுழல்

ஆதிச் சுழல்

 

இந்த அந்தர வெளியில்

இந்தப் பம்பரத்தை

எறிந்ததுவும் ஆர்?

 

மறை கரம்

சொடுக்கி விட்ட

அதன் சூட்சுமக் கயிற்றில்

சுழலும்

கோடா கோடி ஆலங்களும்,

 

ஒரு விரல் நுனியில்

சுற்றி வரும் இரகசியத்தைச்

சொல்லித் தருவதுவும் யார்..

 

அந்தரத்தில் சுழலும்

வித்துவம்.. அது

சூஃபியின் தத்துவம்

 

அத்தஹியாத்தில்

சுட்டுவிரல்

அசையாதிருக்கும் போதில்

சுழற்சி நிற்கும்

சேதி வரும்..


Friday, February 2, 2024

மோனம்

 

மோனம்

 

வா

என் வாசலுக்கு!

வானத்தின் இரகசியங்களை

என்னில் எழுது..

மோனத்தின் எல்லையை

எனக்கு எடுத்துக் கூறு!

பரவசம் பரவும் நேரத்தில்

பக்கத்தில் வந்து பாடு

வசீகரிக்கும் அந்த

விண்ணகத்தின்

பாடலை..

பேரானந்த உச்சத்தில், நான்

பிணைந்திருக்கையில்

அந்தப் பேரண்டத்தின்

பேரின்பப் பேச்சைப்

பேசு.

ஏகத்தின் குரலை

எந்தன் செவியினில் ஓது.

ஏகாந்த நிலையில்

ஏறி நான் போகும் போது..

O

 

சுழற்சி

 

சுழற்சி



எத்தனை யுகங்களாக
சுழன்று கொண்டிருக்கிறது
இந்தப் பிரபஞ்சப் பம்பரம்...

ஆதி எறிந்த
பம்பரமோ... இது 
ஆதியில்  எரிந்த 
சிதம்பரமோ..

வட்டப் பாதையில்
இதனைத் திட்டப்படுத்தியதாரோ..
அதன்
விட்டத்தை அளத்தலும் கூடுமோ..

வேகச் சுழற்சியில்
அது,
விரைகின்ற போதில்
வரைகின்ற 
விதியின் சித்திரம்
மஹா விசித்திரம்...

சுற்றிச் சுழலும்
அதன்
சூட்சுமக் கயிறு
யார் கையில்...?
O

 

 

 

ஆன்மிக இராகம்

 

ஆன்மிக இராகம்

 

 

கூவிக் கொண்டிரு

என் குயிலே...

 

காற்று வெளி கிழித்து

கானகமெல்லாம் ஊடுருவி

கல்புக்குள் கசிகின்ற

கந்தர்வ இசையெனவே..

 

குரலைப் பிழிந்து பிரபஞ்சக்

கிண்ணத்தில் ஊற்றுகிறாய்

நானதை அருந்தி,

 

கனவுக்கு இறக்கை வைத்துக்

ககனத்தில் பறந்திடல் கூடுமோ..

உள்ளூற

ஊடுருவி ஒலிக்கின்ற

அந்தச்

சோகத்தை சொல்லுகின்ற

செப்பம்தான் என்னே..

 

ஓ..அந்த

ஆன்மிக இராகத்தில்- நான்

ஆழ்ந்துவிட ஒண்ணாதோ..?

O

கடவுள் துகள்

 

கடவுள் துகள்

 

பிரபஞ்சத்தின்

அணுப் பொருளே,

அகங்காரம் ஏனோ..

 

சராசரத்தின்

சாரப் பொருளே

சமரசமாய் ஆகி விடு

 

பிரம்மாண்டத்தில்

பிணைந்திருப்பதால்

நீ மட்டுமே

பிரபஞ்சம் இல்லை

அணுவுக்கணுவாய்

ஆகியிருப்பதில்

ஆனந்தம் கொள்..

 

அதற்குள்ளே

களிநடம் புரி..

 

அதுவே,

ஆருமறியா

ஆனந்தப் பெரு நடனம்..

O

ரஸ்ஸாக்கின் ரகசியம்

 

.ரஸ்ஸாக்கின் ரகசியம்

 

 

கொட்டிக் கிடக்கின்றன 

ஆயிரம் கவிதைகள்

என் வாசலெங்கும் 

 

கொத்தித் தின்னுங்கள்

குருவிகளே..

இரைப்பை நிறைய

 

தத்தித் தாவிப் பொறுக்குங்கள்

தெத்தித் தீய்த்துப் பகிருங்கள்

விருந்தினர் நீங்கள்..

 

குஞ்சுகளுக்கும்

கொண்டு செல்லுங்கள்

ஊட்டி மகிழுங்கள் 

 

பசியாறிப் பின்

பாட்டொன்று பாடுங்கள்

அதில் என்

ஆன்மா நனையட்டும்..

O

 

பிணந்தின்னி

 

. பிணந்தின்னி 

கத்தாதே காகமே

வந்து என் மலத்தைக் 

கொத்தாதே காகமே

 

சத்தான கவிதை

உனதெனச் சாற்றாதே காகமே 

காதில் பூச் சுற்றாதே

ஆகாயத் தோட்டியே 

 

சபையில் வந்து

சும்மா சுத்தாதே காகமே

இலக்கியம் இதுவெனக் கத்தி 

எத்தாதே காகமே

 

குப்பியைக் கிளப்பிக்

குந்தாதே வரிசையில் 

குடைந்து குடைந்து

குத்தாதே காகமே

 

கவிதையின் தரம்

காலம் சொல்லும்

நீ சொல்லாதே

வீணாக வந்தென்

வாசலில் தெத்தாதே காகமே..

0