Wednesday, November 22, 2023

Tuesday, October 17, 2023

வாப்பா போகிறேன் மகளே

 வாப்பா போகிறேன் மகளே

-------------------------

 

விலகி நில் மகளே

வண்டி வந்திருக்கிறது வாசலுக்கு 

வாப்பாவை ஏற்றிச் செல்ல..

 

வழி நெடுக

வாப்பாவின் கரம் பற்றியிருந்தாய்- இனி

வேறு வழியில்லை. மகளே

வாப்பா போகிறேன்....

 

தட்ட முடியாத அழைப்பு

தட்டி அழைக்கிறது

தந்தை போகிறேன்..

 

இறுதியாக ஒருமுறை

இந்த முகத்தைப்

பார்த்துக் கொள்- கண்ணே 

இனி நாம் சந்திப்பதற்கில்லை 

 

விழிநீரைத் துடைத்துக் கொள்.

விம்மலை அடக்கிக் கொள்.

 

இப்போது,

விலகி நில்

என் மகளே..

வாப்பாவுக்கு விடை கொடு..!

O

கூடு கலைதல்

கூடு கலைதல்

-------------

 சிட்டுக்குருவி, உன் கூட்டைச் 

சிதைத்து  எறிந்தது யார்

பட்டுச் சிறகால் பறந்து பறந்து நீ

கட்டிய வீட்டைக் கலைத்தது யார்?

 

பொட்டுப் பொட்டாய் நீ இட்டிருந்த

முட்டைகளை மோதியது எது?

கட்டுச் செட்டாய் நீ அடைக்காத்ததை

விட்டெறிந்த விரோதியவன் எவன்?

 

தொட்டணைக்கக் காத்திருந்த போது

சட்டெனக் கனவைக் கலைத்துக்

கொடூரம் புரிந்ததந்த விதியோ..

கொட்டும் கண்ணீருக்கென்ன பதிலோ?

 

விட்டு விட முடியா வேதனைதான்

தட்டிவிடத் தாங்கொணாத் துயரம்தான்

முட்டி அழும் சிட்டுக்குருவியுன் சோகம்

கண்டு இந்தக் காடெல்லாம் அழுகிறதே..

O

தீரன்...


Friday, October 6, 2023

V. A. ஜூனைத்

கவிதைகள் பற்றி எழுத்தாளர்  V. A. ஜூனைத் அவர்கள் 



 எளிமையான 

மொழிநடை


அமைதியாக

ஊர்ந்து 

செல்லும் 

வார்த்தைகள்


ஆழிக்கடலென

மௌனித்து

நிற்கும்   ஆழம்


வாழ்க்கையின்

நிலையாமை

பற்றிப் பேசுகிற

புனைவுப்படிமம்


வாசகனை

கடைசிச்சொட்டு

வரை ஈர்த்துச்

செல்லும் லாவகம்


இத்தனையும்

தாண்டி   வீடுபேறு

பற்றிப்பேசுகின்ற

உள்ளுறைஞானம்


அற்புதம்  கவிஞரே

Friday, September 8, 2023

சட்டைகள்

 சட்டைகள்

----------


எத்தனை சட்டைகள்

எடுத்து அணிந்த கோலங்கள்..


வண்ணச் சட்டைகள்

வடிவான வடிவங்கள்

எண்ணப்படி எடுத்தணிந்த

எழில் மிகு தோற்றங்கள்


கொள்ளை கொள்ளையாய்

காட்சி தந்து

மனதைக்

கொள்ளை கொள்ளும் கோலங்கள்


வர்ண அழகன் அணிகின்ற

வசந்தத்தின் துணிமணிகள்

அவன்,

ஒவ்வொன்றாய் எடுத்தணிந்து

ஒய்யாரம் காட்டுகின்ற

ஒயில்தான் என்னே..


இயற்கை தோய்த்துப் போட்ட

இவ்வளவு சட்டைகளையும்,

சட்டை செய்யாத 

அவனுக்குத்தான்

எத்தனை சட்டைகள்..?

0

தீரன்.

சூன்ய வெளி

 சூன்யவெளி

------------


இடமில்லா ஓரிடத்தில்

நாளில்லா ஒரு நாழிகையில்

ஆளில்லா ஒரு கூட்டத்தில்,


இன்னும்,

இருளும் ஒளியுமில்லாப் பொழுதில்

பூமியும் வானமுமில்லாதொரு

தளத்தில்,


மேலும் கீழுமில்லா

ஓரிடத்தில்,

திசைகளற்ற ஒரு திசையில்,


தொடக்கமும் முடிவுமில்லா

அந்த எல்லையில்,


நான் வருவேனோ 

இறைவா,


வார்த்தையில்லாதொரு வசனத்தில்

என் காதலைச் சொல்லி அழ!

O

தீரன்..

தீரா ஆசை

தீரா ஆசை 


சேரா இடம்   சேர்வதற்குத் 

தீரா ஆசை மீக்குற்றுத் 

தீராவெளி தேடிச்

சிறு வெளிச்சம் கொளுத்திப் 

பெரும் 

சூறாவளிக்குள் பறக்கின்ற 

என் மின்மினிப் பூச்சியே


ஆராவது போய்க் கண்டதுமுண்டோ

அந்த அகண்ட வெளிக்கொரு

வழியுமுண்டோ....


கோடா கோடித் திரை விலகிக்

கெண்டைக் காலின் தரிசனம்

கிடைக்கும் என்றா நீ

பறந்து செல்கின்றாய்

என் கண்மணிப் பூச்சியே...


போ.. போ,

நாட்டம் என்பது

நம் கையில் இல்லை என்பதறியாயோ 

அட, என் ஆன்மிகப் பூச்சியே..

தீரன் 



Friday, August 18, 2023

புனித பரித்தியாகத்தின் விலை இந்த உயிர்.

புனித பரித்தியாகத்தின் விலை இந்த உயிர்.

 

 

 

அந்த உயிர் நீங்கியதோ

அந்த உயிர் நீங்கியதோ...

 

ஒரு சொட்டும் மாசுபடாமல்

சுட்டும் சுடர் விழியில் மின்னிய அந்த உயிர்...

 

உலகத்துக்கு உயிர் தந்த  உயிரின் உயிர் அது.

தியாகத்துக்கு தீ வைத்து ஒரு

தீச்சுடரை ஏற்றி வைத்த அந்த புனிதப் பூ உயிர் நீங்கியதோ...

 

கர்பலாவின் கண்களில்

கண்ணீர்க் கோடுகள் வரைந்த பின்

தன் பாட்டனாரைச் சந்திக்கப்   புறப்பட்டதோ...

 

இரத்தம் குடித்த வாளின் கூர் முனையில்

ஒரு காவியம் எழுதி உலகுக்குத் தந்து சென்றதுவோ..

 

புனித அன்னையின் பூமடி தவழ்ந்து

புண்ணியம் சுமந்த அந்த உயிர்....

ஒப்பற்ற வீரத்தின் மாசற்ற மனிதரின்  தோளில் சுமந்த அந்த

சோபன உயிர்  சொல்லாமல் போனதுமேன்.....

அதனை அழைக்க சொர்க்கத்துக்கு ஏனிந்த அவசரமோ....

 

கண்மணி நபிகளின் கரம் பிடித்து நடந்த அந்தக்

கம்பீர உயிர், களத்தில் கழுத்துக் கொடுத்த பின்,

காற்றில்  ஒரு கவிதை எழுதிக் கலந்ததுவோ...

 

இல்லை..

ஒரு போதும் இல்லை.

 

அந்தப் பரிசுத்த உயிர் வாழ்கிறது

ஆம், அந்தப் பரிசுத்த உயிர் வாழ்கிறது

 

ஒவ்வொரு முஸ்லிமின் நாடி நரம்புகளிலும் ஊடுருவி

அந்த உயிர் வாழ்கிறது..

 

உலகத்தின் முடிவு வரைக்கும்

உள்ளார்ந்து வழிநடத்தும்

அந்த ஆத்மாவின் சக்திதான் என்ன...

 

அது  அந்தக் கர்பலாவுக்கு சொன்ன செய்திதான்  என்ன...

 

தியாகம் என்ற தீயில் இறங்கி வருக..

தியாகம் என்ற தீயில் இறங்கி வருக..

 

உண்மை என்ற தடாகம் அருகே

உமக்காக காத்திருப்பேன்

 

என்றுரைத்த அந்த

அந்த உயிரின் உயிராய் ஆகிட உணர்வுகள் துடித்திட

அந்தப் புனித உயிரைப் போற்றிப் பணிகின்றோம்.

அந்தப் புனித உயிரைப் போற்றிப் பணிகின்றோம்.

 

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

 

0

 

 

 

கவி வரிகள்--- தீரன். ஆர்.எம். நௌஷாத்

அனுசரணை- ‘கவிமணி பௌஸ்தீன்


Thursday, August 17, 2023

தகிப்பு

 தகிப்பு

ooooooo


கொழுத்துற வெயிலில்

கண்களும் இருளுது  

வடிகிற வியர்வையில்

உடலமும் உருகுது 


அடிக்கிற அனலில்

அகிலமும் சுருளுது 

 நடக்கிற போதினில்

கால்களும் தீய்க்குது


எரிக்கிற கதிரவன் 

ஏறியும் வருகுது

தகிக்கிற தகிப்பினில்

தொண்டையும் வரளுது


சுடுகிற சூரியன்

உச்சியில் காயுது

நரகத்தின் வெம்மை

நினைவினில் தாவுது 

0

தீரன்

உயிருதிர் காலம்

 உயிருதிர் காலம்

--------------------------


உயிர் விருட்சத்திலிருந்து

ஒவ்வோர் கணமும்

உதிரும் இலைகளில்

உன் பெயர் உண்டா..


துளிரில் விழுவதும்

சருகாய் சறுகுவதும்

இடையில் உதிர்வதுவும்


எந்த இலைக்கு

எந்தக் கணத்தில்

எழுதப்படும் 

அந்தக்கணக்கு..


விதிக் காற்று

வீசியடிக்க

எகிறிடும் இலைகளில்...


எந்தன் இலையே

என்று வீழ்வாய்..?

O

✍️ தீரன்..

விதி

 விதி 


விழியில் எழுதி

விதியில் வைத்ததும் 

தாளில் எழுதித் 

தலையில் வைத்ததும்..


உளியால் செதுக்கி

ஊழியில் வைத்து

வலிகள் தந்ததும்..


தலைச் சுழியில்

தொடங்கி

தலை விதிக்குத்

தலைப்பிட்டதும்..


எழுதுகோல் எடுத்து 

எழுத்தெல்லாம் நடத்தும் 

விசித்திர விதிக்கு

இந்த விதியை 

விதித்தது...


விதியின்

தலைவிதியோ?

0

தீரன்....

மாயத் தூரிகை

 மாயத் தூரிகை 

===========


அம்புலிக் குவளையில் 

அழகொளி குழைத்து

அடர் வனம் வரைந்து..


ஆழக் கடலும்

அலைகளும்

அள்ளித் தெளித்து 


பாலைத் தகிப்பில் 

கானல்நீர்

பாயச் செய்து,


இன்னும்,

வான் வெளியில்

வெள்ளிப் புள்ளிகள் வைத்து 


பிரபஞ்சத் திரையில்

தானே வரைந்து

தானே இரசிக்கும் 


அந்த

மாய ஓவியன்

எறிந்த தூரிகை 

எங்கே..?

0

தீரன்.

ஏகமானாய்

 ஏகமானாய்..

-----------------


மானானாய்

மான் வாழும் கானானாய்

மீனானாய் 

மீன் நீந்தும் நீரானாய் 

தேனானாய்

தேன் தரும் பூவானாய்


வானானாய்

வானில் நீந்தும் நிலவானாய் 

தாயானாய் 

தரணியில் அன்பின் ஊற்றானாய்..

ஊனானாய்

உயிர்கள் உறையும் உடலானாய்..


இன்னுமின்னும்,

ஆணானாய் பெண்ணானாய் 

நானானாய் நீயானாய்

இவை எல்லாம்

ஏனானாய்..

என்னிறைவா...

O

தீரன்..

Friday, July 21, 2023

பஞ்ச பூதம்

 பஞ்ச பூதம்

----_-------
ஓடும் நீரில் எல்லாம்
உன் பெயரை வாசிக்க முயல்கிறேன்..
நீண்டு விரியும்
நிலத்தில் எல்லாம்
நின் திருநாமம் தேடுகின்றேன்
வீசி வரும் காற்றில்
உன் பெயர் வாசிக்க
ஒரு புது மொழி யாசிக்கின்றேன்
நெருப்பின் வடிவங்களிலும்
உன் பெயரின் அர்த்தங்கள் தீயெனத் தகிப்பதை
உணர்கின்றேன்.
ஆகாயம் முழுவதும்
அலைகிறேன்
ஆனாலும்
உன் பெயரை அறிகிலேன்..
பஞ்சபூதங்களிலும்
பரவியிருக்கும் அந்தப்
பெயரில்லாப் பெயரை
எவ்வாறு அழைப்பேன்..?
O
தீரன்

கோலம்

 கோலம்...

----------
எத்தனை வர்ணங்கள்
உந்தன் செட்டையில்
வரைந்தவன் யார்..என்
வண்ணத்துப் பூச்சியே
கலர் கலராய்க்
கோலங்களை, உன்னில்
கரைத்து ஊற்றியவனைக்
காட்டமாட்டாயா
என் கனவுப் பூச்சியே..
உன் முதுகில்
நிறம் தீட்டிய தூரிகையை
எங்கே எறிந்தான்
அந்தத் தூயவன்
சொல்ல மாட்டாயா..
இறைவனை விட
வர்ண அழகன் யார்..
அவன் வர்ணத்தில்
தோய்த்து உன்
வாழ்வை வரைந்ததை
நான் வாசிக்கும் முன்னர்
பறந்து விடாதே
என்
பட்டாம்பூச்சியே..
O
✍️தீரன்...

சா -மரம்

 சா, மரம்

---------
இறப்பும், பிறப்பும் என்ற
இரு இறக்கைகள் கொண்டு
காலவெளியில்
பறக்கிறேன்..
உயிர்ப் பறவையைத்
திறந்து விட...
ஆயின்,
திறப்பு என்னிடமில்லை
எமனிடம் சொல்லியும்
எவனிடம் சொல்லியும்
சாவி வரவில்லை
சாவும் வரவில்லை
என் இறக்கைகளை
இயக்குபவனிடம்
ஓய்வதற்கு
அனுமதி கேட்டு,
திக்குத் திசை அறியாத்
தீரா வெளியில்
திரிகிறேன்..
எந்த மரக்கிளையில்
போய் அமர்வேன்...?
O
✍️தீரன்

உயிருண்ணி

 உயிருண்ணி

------------------
ஊர்ந்து வருகிறது
உயிருண்ண.
எந்தப் புற்றுக்குள்
இருந்தது இதுவரை..
ஆதி எழுத்தை
அறிந்த
ஆதிசேடன் அது
நெருங்கிய பின்னரே
அதன்
நெடுப்பம் தெரிகிறது
படமெடுத்து ஆடிப்
பக்கத்தில்
உயிர் நுக்கத்தில்
உராய்ந்து,
உயிர் உண்டு செல்லும்
அதற்கும்
ஓர் உயிருண்டு..
O
தீரன்..

இலையுதிர்காலம்

 இலையுதிர் காலம்

--------------------------
உயிர் விருட்சத்திலிருந்து
ஒவ்வோர் கணமும்
உதிரும் இலைகளில்
உன் பெயர் உண்டா..
துளிரில் விழுவதும்
சருகாய் சறுகுவதும்
இடையில் உதிர்வதுவும்
எந்த இலைக்கு
எந்தக் கணத்தில்
எழுதப்படும்
அந்தக்கணக்கு..
விதிக் காற்று
வீசியடிக்க
எகிறிடும் இலைகளில்...
எந்தன் இலையே
என்று வீழ்வாய்..?
O
✍️ தீரன்

இச்சை

 நப்ஸ். (இச்சை)

-----------------
பிறவிக் கடலைத்தாண்டி
நெடுந்தூரம்
தாவி வந்த குதிரை இது
சவாரி செய்தவர்களும்
இறங்கிப் போய்,
சுமந்த மூட்டைகளையும்
இறக்கி விட்டு..
லாயத்தில் கிடக்கிறது
இனி
இலாபம் இல்லை
சேனமும் உருவப்பட்டு
கடிவாளமும் கழற்றப்பட்டு
தனித்துக் கிடக்கிறது
வண்டியில் பூட்டவும்
வழியில்லாத
நொண்டிக் குதிரை
மூச்சிரைத்துக் கிடக்கிறது
இனிப்
பேச்சிழந்து விடுமோ..
O
தீரன்..



All reactions:
Thassim Ahamed, Sithy Mashoora Suhurudeen and 106 others