Thursday, August 17, 2023

தகிப்பு

 தகிப்பு

ooooooo


கொழுத்துற வெயிலில்

கண்களும் இருளுது  

வடிகிற வியர்வையில்

உடலமும் உருகுது 


அடிக்கிற அனலில்

அகிலமும் சுருளுது 

 நடக்கிற போதினில்

கால்களும் தீய்க்குது


எரிக்கிற கதிரவன் 

ஏறியும் வருகுது

தகிக்கிற தகிப்பினில்

தொண்டையும் வரளுது


சுடுகிற சூரியன்

உச்சியில் காயுது

நரகத்தின் வெம்மை

நினைவினில் தாவுது 

0

தீரன்

உயிருதிர் காலம்

 உயிருதிர் காலம்

--------------------------


உயிர் விருட்சத்திலிருந்து

ஒவ்வோர் கணமும்

உதிரும் இலைகளில்

உன் பெயர் உண்டா..


துளிரில் விழுவதும்

சருகாய் சறுகுவதும்

இடையில் உதிர்வதுவும்


எந்த இலைக்கு

எந்தக் கணத்தில்

எழுதப்படும் 

அந்தக்கணக்கு..


விதிக் காற்று

வீசியடிக்க

எகிறிடும் இலைகளில்...


எந்தன் இலையே

என்று வீழ்வாய்..?

O

✍️ தீரன்..

விதி

 விதி 


விழியில் எழுதி

விதியில் வைத்ததும் 

தாளில் எழுதித் 

தலையில் வைத்ததும்..


உளியால் செதுக்கி

ஊழியில் வைத்து

வலிகள் தந்ததும்..


தலைச் சுழியில்

தொடங்கி

தலை விதிக்குத்

தலைப்பிட்டதும்..


எழுதுகோல் எடுத்து 

எழுத்தெல்லாம் நடத்தும் 

விசித்திர விதிக்கு

இந்த விதியை 

விதித்தது...


விதியின்

தலைவிதியோ?

0

தீரன்....

மாயத் தூரிகை

 மாயத் தூரிகை 

===========


அம்புலிக் குவளையில் 

அழகொளி குழைத்து

அடர் வனம் வரைந்து..


ஆழக் கடலும்

அலைகளும்

அள்ளித் தெளித்து 


பாலைத் தகிப்பில் 

கானல்நீர்

பாயச் செய்து,


இன்னும்,

வான் வெளியில்

வெள்ளிப் புள்ளிகள் வைத்து 


பிரபஞ்சத் திரையில்

தானே வரைந்து

தானே இரசிக்கும் 


அந்த

மாய ஓவியன்

எறிந்த தூரிகை 

எங்கே..?

0

தீரன்.

ஏகமானாய்

 ஏகமானாய்..

-----------------


மானானாய்

மான் வாழும் கானானாய்

மீனானாய் 

மீன் நீந்தும் நீரானாய் 

தேனானாய்

தேன் தரும் பூவானாய்


வானானாய்

வானில் நீந்தும் நிலவானாய் 

தாயானாய் 

தரணியில் அன்பின் ஊற்றானாய்..

ஊனானாய்

உயிர்கள் உறையும் உடலானாய்..


இன்னுமின்னும்,

ஆணானாய் பெண்ணானாய் 

நானானாய் நீயானாய்

இவை எல்லாம்

ஏனானாய்..

என்னிறைவா...

O

தீரன்..