Friday, July 21, 2023

பஞ்ச பூதம்

 பஞ்ச பூதம்

----_-------
ஓடும் நீரில் எல்லாம்
உன் பெயரை வாசிக்க முயல்கிறேன்..
நீண்டு விரியும்
நிலத்தில் எல்லாம்
நின் திருநாமம் தேடுகின்றேன்
வீசி வரும் காற்றில்
உன் பெயர் வாசிக்க
ஒரு புது மொழி யாசிக்கின்றேன்
நெருப்பின் வடிவங்களிலும்
உன் பெயரின் அர்த்தங்கள் தீயெனத் தகிப்பதை
உணர்கின்றேன்.
ஆகாயம் முழுவதும்
அலைகிறேன்
ஆனாலும்
உன் பெயரை அறிகிலேன்..
பஞ்சபூதங்களிலும்
பரவியிருக்கும் அந்தப்
பெயரில்லாப் பெயரை
எவ்வாறு அழைப்பேன்..?
O
தீரன்

கோலம்

 கோலம்...

----------
எத்தனை வர்ணங்கள்
உந்தன் செட்டையில்
வரைந்தவன் யார்..என்
வண்ணத்துப் பூச்சியே
கலர் கலராய்க்
கோலங்களை, உன்னில்
கரைத்து ஊற்றியவனைக்
காட்டமாட்டாயா
என் கனவுப் பூச்சியே..
உன் முதுகில்
நிறம் தீட்டிய தூரிகையை
எங்கே எறிந்தான்
அந்தத் தூயவன்
சொல்ல மாட்டாயா..
இறைவனை விட
வர்ண அழகன் யார்..
அவன் வர்ணத்தில்
தோய்த்து உன்
வாழ்வை வரைந்ததை
நான் வாசிக்கும் முன்னர்
பறந்து விடாதே
என்
பட்டாம்பூச்சியே..
O
✍️தீரன்...

சா -மரம்

 சா, மரம்

---------
இறப்பும், பிறப்பும் என்ற
இரு இறக்கைகள் கொண்டு
காலவெளியில்
பறக்கிறேன்..
உயிர்ப் பறவையைத்
திறந்து விட...
ஆயின்,
திறப்பு என்னிடமில்லை
எமனிடம் சொல்லியும்
எவனிடம் சொல்லியும்
சாவி வரவில்லை
சாவும் வரவில்லை
என் இறக்கைகளை
இயக்குபவனிடம்
ஓய்வதற்கு
அனுமதி கேட்டு,
திக்குத் திசை அறியாத்
தீரா வெளியில்
திரிகிறேன்..
எந்த மரக்கிளையில்
போய் அமர்வேன்...?
O
✍️தீரன்

உயிருண்ணி

 உயிருண்ணி

------------------
ஊர்ந்து வருகிறது
உயிருண்ண.
எந்தப் புற்றுக்குள்
இருந்தது இதுவரை..
ஆதி எழுத்தை
அறிந்த
ஆதிசேடன் அது
நெருங்கிய பின்னரே
அதன்
நெடுப்பம் தெரிகிறது
படமெடுத்து ஆடிப்
பக்கத்தில்
உயிர் நுக்கத்தில்
உராய்ந்து,
உயிர் உண்டு செல்லும்
அதற்கும்
ஓர் உயிருண்டு..
O
தீரன்..

இலையுதிர்காலம்

 இலையுதிர் காலம்

--------------------------
உயிர் விருட்சத்திலிருந்து
ஒவ்வோர் கணமும்
உதிரும் இலைகளில்
உன் பெயர் உண்டா..
துளிரில் விழுவதும்
சருகாய் சறுகுவதும்
இடையில் உதிர்வதுவும்
எந்த இலைக்கு
எந்தக் கணத்தில்
எழுதப்படும்
அந்தக்கணக்கு..
விதிக் காற்று
வீசியடிக்க
எகிறிடும் இலைகளில்...
எந்தன் இலையே
என்று வீழ்வாய்..?
O
✍️ தீரன்

இச்சை

 நப்ஸ். (இச்சை)

-----------------
பிறவிக் கடலைத்தாண்டி
நெடுந்தூரம்
தாவி வந்த குதிரை இது
சவாரி செய்தவர்களும்
இறங்கிப் போய்,
சுமந்த மூட்டைகளையும்
இறக்கி விட்டு..
லாயத்தில் கிடக்கிறது
இனி
இலாபம் இல்லை
சேனமும் உருவப்பட்டு
கடிவாளமும் கழற்றப்பட்டு
தனித்துக் கிடக்கிறது
வண்டியில் பூட்டவும்
வழியில்லாத
நொண்டிக் குதிரை
மூச்சிரைத்துக் கிடக்கிறது
இனிப்
பேச்சிழந்து விடுமோ..
O
தீரன்..



All reactions:
Thassim Ahamed, Sithy Mashoora Suhurudeen and 106 others