Friday, August 18, 2023

புனித பரித்தியாகத்தின் விலை இந்த உயிர்.

புனித பரித்தியாகத்தின் விலை இந்த உயிர்.

 

 

 

அந்த உயிர் நீங்கியதோ

அந்த உயிர் நீங்கியதோ...

 

ஒரு சொட்டும் மாசுபடாமல்

சுட்டும் சுடர் விழியில் மின்னிய அந்த உயிர்...

 

உலகத்துக்கு உயிர் தந்த  உயிரின் உயிர் அது.

தியாகத்துக்கு தீ வைத்து ஒரு

தீச்சுடரை ஏற்றி வைத்த அந்த புனிதப் பூ உயிர் நீங்கியதோ...

 

கர்பலாவின் கண்களில்

கண்ணீர்க் கோடுகள் வரைந்த பின்

தன் பாட்டனாரைச் சந்திக்கப்   புறப்பட்டதோ...

 

இரத்தம் குடித்த வாளின் கூர் முனையில்

ஒரு காவியம் எழுதி உலகுக்குத் தந்து சென்றதுவோ..

 

புனித அன்னையின் பூமடி தவழ்ந்து

புண்ணியம் சுமந்த அந்த உயிர்....

ஒப்பற்ற வீரத்தின் மாசற்ற மனிதரின்  தோளில் சுமந்த அந்த

சோபன உயிர்  சொல்லாமல் போனதுமேன்.....

அதனை அழைக்க சொர்க்கத்துக்கு ஏனிந்த அவசரமோ....

 

கண்மணி நபிகளின் கரம் பிடித்து நடந்த அந்தக்

கம்பீர உயிர், களத்தில் கழுத்துக் கொடுத்த பின்,

காற்றில்  ஒரு கவிதை எழுதிக் கலந்ததுவோ...

 

இல்லை..

ஒரு போதும் இல்லை.

 

அந்தப் பரிசுத்த உயிர் வாழ்கிறது

ஆம், அந்தப் பரிசுத்த உயிர் வாழ்கிறது

 

ஒவ்வொரு முஸ்லிமின் நாடி நரம்புகளிலும் ஊடுருவி

அந்த உயிர் வாழ்கிறது..

 

உலகத்தின் முடிவு வரைக்கும்

உள்ளார்ந்து வழிநடத்தும்

அந்த ஆத்மாவின் சக்திதான் என்ன...

 

அது  அந்தக் கர்பலாவுக்கு சொன்ன செய்திதான்  என்ன...

 

தியாகம் என்ற தீயில் இறங்கி வருக..

தியாகம் என்ற தீயில் இறங்கி வருக..

 

உண்மை என்ற தடாகம் அருகே

உமக்காக காத்திருப்பேன்

 

என்றுரைத்த அந்த

அந்த உயிரின் உயிராய் ஆகிட உணர்வுகள் துடித்திட

அந்தப் புனித உயிரைப் போற்றிப் பணிகின்றோம்.

அந்தப் புனித உயிரைப் போற்றிப் பணிகின்றோம்.

 

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

 

0

 

 

 

கவி வரிகள்--- தீரன். ஆர்.எம். நௌஷாத்

அனுசரணை- ‘கவிமணி பௌஸ்தீன்