Sunday, February 2, 2025

கவிதைத்தானம்

 

கவிதைத்தானம்

 

என்

முற்றம் முழுவதும்

இறைத்திருக்கிறேன்

என் கவிதைகளை

 

சுற்றம் சூழ வருக

குருவிகளே..

 

சற்றும் விடாது

கொத்திச் செல்லுங்கள்

குற்றம் சுமத்தி

என்னைப்

பற்றறுத்துப் பிரிந்தவளுக்குப்

பாடல் இனி இல்லை.

 

காலக்

கூற்றவன் வந்தென்

கழுத்தைப் பற்றும் வரை

எழுதியவற்றை எறிவேன்

முற்றம் முழுக்க...

 

ஓ.. சிட்டுக் குருவிகளே,

வந்துங்கள்

அலகு நிறைய

அள்ளிச் செல்லுங்கள்..

 

அடுத்த முறை

வந்தால்

எனக்காக நீங்கள்

அஞ்சலிக்கவும் கூடும்.

 

இப்போதே,

இற்றை வரை நான்

இயற்றியவற்றைச்

சுற்றி எறிகிறேன்

 

பற்றிச் செல்க

என் சிட்டுக்களே..

O

தீரன்..

 

தனிமைத் தீ

 

. தனிமைத் தீ

 

வெறிச்சோடிக் கிடக்கிறது

என் வானம்

 

கானம் இசைத்த காற்றைக்

காணவில்லை என்று..

மேகம் சுமந்து பொழிந்த

 

கவிதை மழை

ஓய்ந்து போனதின்று..

சாய்ந்தமருது முழுவதும்

காய்ந்து போய் கிடக்கிறது..

முற்றும் என்று நீ

 

முகம் மறைத்ததில், என்

முற்றம் முழுவதும்

வற்றிப் போனது..

 

மோகனம் பாடிய குரல்

இன்று

கானகம் ஏகியதால்

வானகம் எல்லாம், வீணே

வெறிச்சோடிக் கிடக்கிறது.

 

தனிமைத் தீ

என்னைத்

தின்று கொண்டிருக்கிறது.

O

 

இடி விழுந்த கதை

 

இடி விழுந்த கதை

 

எதற்குச் சொன்னாய்

அந்தக் கதையை...

 

மூச்சு முட்டி

விழிகள் வெறிச்சிட்டு

விண்ணைப் பார்க்கவும்

 

கவிதைகளுக்கு

கபன் இட்டுப் போர்த்தவும்

 

தொண்டைக்குள்

கபுருக் குழி தோண்டவும்

 

நெஞ்சம் முழுவதும்

மஞ்சிப் பலகை மூடவும்

 

அன்பை இறக்கி

அடக்கம் செய்து,

எனக்கி நானே

தல்க்கீன் ஓதவுமா...

 

அந்தக் கதையைச் சொன்னாய்

அன்பே..

O