இரவில் நடமாடும் இரவு
இரவு இருளானதும்
எழுந்து விடுவேன்
இரவில்
நடமாடும்
இரவோடு
இரகசியம் பேசிக்கொண்டிருக்க
இது நல்ல நேரம்
இரவே உன்னை
இருளாக்கியது யாரோ..
கறுப்புப் போர்வையை
உதறி என்னை மூடிய இரவு
நீண்ட மௌனத்தில் ஆழ்ந்தது
இரவு முழுவதும்
இருவரும் பேசிக்கொள்ளவில்லை
இருள் விலகி
இரவு போக எழுந்தது
எனக்கு என்ன பதில்
என்றேன்
உண்மையில் நான்தான் ஒளி
என்னைப் பார்க்க
நீ சக்தி பெறவில்லை
இருள்
போய்விட்டது
ஒளி வந்தது
இருள் போகவில்லை
ஒளி வரவில்லை...
00
காலண்டரின் கடைசித் திகதி
வேடிக்கை மனிதன்தான்
நீ..
இதோ
கட்டளைக்காக காத்திருக்கும் இஸ்ராபீலின்
வாயில் ஷூர்
ஒரு கணத்தில்,
உலகின் இறுதி நாளின்
திகதியைக்
கிழிப்பவன் வந்து விடக்கூடும்..
வானம்
பிளந்து
வரும்
வானவரை நீ காணும் போதில்
பஞ்சாய் பறந்து வரும்
மலைகளை
பார்த்து இரசிப்பாயோ...
அன்றி
உதிர்ந்து விழும்
நட்சத்திரங்களை
பொறுக்கிக் கொண்டிருப்பாயோ
தீ
மூட்டப்படும் கடலில்
என்ன வேலை உனக்கு...
புவி அதிர்ந்து
புதைகுழிகள் திறக்கப்படும்போது
யார் யாரை வரவேற்க..?
போ..போ..
சுஜூதில் கிட...
00
எழு(த்)து
சுழியில் தொடங்கியதோர்
பேரெழுத்து...
அதன் பேர் தலையெழுத்து
பலருக்கு ஒற்றைச்சுழி
சிலருக்கு ரெட்டைச்சுழி
தலையெழுத்தை
விதி
தலையில் எழுதியதாலா
அது தலைவிதி...
தலையிலிருந்தாலும்
அது தொலையெழுத்து
வாசிக்க முடியாத
வலைப்பின்னல்
உருவமில்லாத உயிர் எழுத்து
மெய்தான்
மெய்யை எழுதும்
மெய்யெழுத்து
மெய்யை பொய்யாக்கும்
கையெழுத்து அது
எழுதி
முடித்துக்
கையெழுத்திட்டதும்
எழுதுகோலின்
மை உலர்ந்தது...
எழுத்து
எழுந்து நடந்தது...
00
காலமான காலம்
காலத்தின்
மீது
காலமே சத்தியம் செய்கிறது
முக்காலமும் தற்காலமே
எக்காலமும் இக்காலமே என்கிறது
காலத்தை திட்ட வேண்டாம்
நானே காலமாக இருக்கிறேன்
நானே காலமாக இறக்கிறேன்
காலத்துக்கு,
காலம் சொன்னது
காலத்துக்குக் காலம்
காலம் செல்வதும் நானே...
புதியதோர்
காலமாகப் பிறப்பதுவும் நானே
ஆயின்
காலமானார் எனச் சொல்லாதீர்
அகால மரணம் எனவும் கூறாதீர்
காலம் எழுதுகிற கணக்கில்
கணக்கில்லாத காலங்கள் உண்டு..
காலா
காலமாய்
காலத்தை அளப்போரே வருக
கால நேரம் கணிக்கக்
காலமாணி ஒன்று கொணர்க
காலம்
கடக்கப்
பாலம் உண்டா சொல்வீர்?
காலம் கடந்த ‘புறாக்’ மட்டுமே
காலம் கடந்தும் வாழ்கிறது..
காலாதி
காலமாய்
காலாவதி ஆகாமல்
காலமாய் இருக்கும்
காலம் நான்...என உணர்வீர்.
நானே
காலமானால் காலம் ஏது?
௦௦
இறை வர்ணத்தில் தோய்வீராக
வெள்ளத்தில்
தத்தளிப்போரே
நூஹின் கப்பலுக்குள் செல்க
பிர் அவ்னுக்கு அஞ்சுவோரே
மூஸாவுடன்
பிளவுண்ட
நைல்நதிக்குள் இறங்குக..
நம்ரூத்தை
எதிர்ப்போரே
இப்றாஹீமுடன்
நெருப்புக்குள் பாய்க....
பிலாத்துவுக்கு
பயந்தோரே
ஈசாவுடன்
வானுலகில் மறைக...
என்னை அழைக்காதீர்கள்
நான்
யூசூபின் அமைச்சரவைக்குச்
செல்லப் போவதுமில்லை
தாவூத்துடன் மலைகளுக்கு ஏறி
சங்கீதம் பாடப் போவதுமில்லை
வர்ணங்களைப்
போர்த்திக் கொண்டிருக்கும்
பிரபஞ்ச வெளியில்
தோயப் போகிறேன்...
அங்கேயே
கரைந்து விடப் போகின்றேன்
இனித்
திரும்பி வரமாட்டேன்..
00
No comments:
Post a Comment