Monday, March 14, 2022

5 கவிதைகள்

 

 

 

உள்ளங்கையில் உள்ளுணர்வு

 

மருதானியிட்டுச் சிவந்த

உள்ளங்கையைக் காட்டினாள் மகள்...

 

நல்லா இருக்கா வாப்பா...

அழகாய் இருக்குடா மகளே...

 

கலீரெனச்  சிரித்தோடுகிறாள் மகள்....

 

உள்ளங்கை வட்டத்தில் நீ

உணர்த்தியது என்ன மகளே..

 

சுற்றி நீ வைத்த..அந்தச்

சின்ன வட்டங்கள் சொன்ன

செய்திகள் என்ன மகளே..

 

தொப்பி போட்ட உன் விரல்கள்

தொட்டுக்காட்டியது என்ன மகளே

 

விரல் கணுக்களின் கோடுகள்

விண்ட கதை அறிவேன் மகளே..

 

வாழ்வொன்று தேடித்தர

வக்கற்ற இந்த

 

வாப்பாவை மன்னித்து விடு மகளே....

 

௦௦

 

நாளைக்குப் பெருநாள்

 

 

வானம்

விண்மீன் ஜரிகை உடுத்தி

பிறைச் சிமிக்கியும் அணிந்தது

 

குரோட்டன்கள்

மருதாணிக் கைகளை

விரித்துக் காட்டிச் சிரித்தன

 

வண்ணத்துப் பூச்சிகள் கூட

வர்ணச் செட்டைகள் மாற்றிப்

பறந்து திரிந்தன.

 

என் மகளும்

புதிதாகத்

தைத்துக் கொண்டிருந்தாள்

 

தாவணியில்

பழைய

பொத்தல்களை....

 

00

:

 

 

ஏக்கம்

 

முறைதவறிச் செய்த பாவ

மீட்சி பெறுவதெக்காலம்

 

கறை நீங்கி கல்பு குளிர்ந்து

களித்தாடுவது எக்காலம்

 

சிறை மீண்டு சிரம் நிமிர்த்திச்

சிறகடிப்பதுவும் எக்காலம்

 

குறையறிவு நீங்கி நான்

குன்றென நிமிர்வதெக்காலம்

 

பிறைவானம் கடந்து மேலேறிப்

பிரயாணம் போவதெக் காலம்..

 

அறைமுழுவதும் அகல் ஏற்றி

ஆனந்திப்பதுவும் எக்காலம்

 

மறையோதி மனம் மகிழ்ந்து

மலர்வதுவுமெக்காலம்..

 

நிறைகுருநாதர் கரம்பற்றி

நின்றொளிர்வதெக்காலம்.

 

இறைவர்ணத்தில் தோய்ந்து நான்

இன்புறுவதுவும் எக்காலம்.?

0

தீரன்..

[8:19 pm, 08/02/2022] RMN\

 

 

: எழுதித் தீராக் கவிதை

➖➖➖➖➖➖➖➖

 

எப்படி எழுத

இந்தக் கவிதையை..

 

தலையில் எழுதியதைத்

தாளில் எழுதுவதா..

அன்றிச்

சுழியில் எழுதியதை

மொழியில் எழுதுவதோ..?

 

ஆழியில் எழுதிய

அரிச்சுவடியை

ஆர்தான் சொல்ல முடியும்..

ஆதியில் எழுதிய

அகரத்தை

ஆருக்குச் சொல்ல இயலும்..

 

விரல் எழுதிய வரியை

விதி  ஒப்புக்கொள்ளுமோ...

 

எழுதிச்செல்லும்

விதியின் விரலில்

நழுவி விழுமோ

நமக்கான எழுத்து...

 

எப்படி எழுத

இந்தக் கவிதையை..?

0

No comments:

Post a Comment