ஏகும் தலம்
சாகுந்தலம் படைத்தவன்
போகுந்தலம்
நெருங்கும் நேரம் இது.
இனி
ஏகும் தலம்
ஏகி ஆவதென்ன..
நரக நெருப்பெனும்
வேகும்தலம் நோக்கிப்
போகும் தளம்
போவதுமுண்மை.
நோகும் பாவமெலாம்
ஒரு சொட்டுக் கண்ணீரில்
மாயும் மாயம் அறிவீரோ
அது
ஆகும் போது
உனதருட் காட்சி
காணும் வகை செய்வாயோ..
கண்ணே ரஹ்மானே..
0
ஒளிமயம்
பேரொளியியின் சந்நிதியில்
ஓரொளி
அது நூரொளி..
ஈரொளியும் நேரொளியாய்
நின்றொளிரக்
காணொளியில்
காண்பது போலக்
கண்ணொளிரக் கண்டது..
நூரொளியின் வருகையால்
பாரொளிர்ந்தது.
பாரொளிர்ந்ததால்
விண்வெளி முழுவதும்
முஹம்மதெனும் பேரொலித்தது..
0
அகத் தீ
கொழுத்திப் போட்டது
கொழுந்து விட்டெரிகிறது
தீபமாய் எரிந்தது,
தீப்பற்றிக் கொண்டது
சுடராய்த் தொடங்கியது
சூழ்ந்து பற்றிப்
பரவி விட்டது.
சில காலம்
நீறு பூத்திருந்தது
இன்று
நெருப்பாய் எரிகிறது
காழ்ந்து எரிந்து, மனக்
காடு முழுவதும்
கருகி விட்டது
தணியாமல்,
கனன்று கொண்டே இருக்கிறது,
உன்னைப்,'பற்றி'
என்னில் பற்றிய
நினைவுப் பெரு நெருப்பு.
0
வக்கிர வதை
வெட்டிய மின்னலை
விழிகளில் ஏந்துகிறேன்
கொட்டிய நெருப்பினை
கொதிப்புடன் விழுங்குகிறேன்
திட்டிய மொழியெல்லாம்
திகைப்புடன் சகிக்கின்றேன்
முட்டிய மோதலை
முழுதாய் தாங்குகிறேன்
குட்டிய போதெல்லாம்
குனிந்தே இருக்கிறேன்
எட்டியவள் உதைத்த போது
எல்லாம் வாங்குகிறேன்
வெட்டிய கபுருக்குள்
வைக்கும் நேரமிதோ
யானறியேன்..
0
சாக்கணம்
இக்கணமே வருக
இஸ்ராயீலே,
கொத்தித் தின்கிறது
கொடும் கழுகு ஒன்று
அண்டம் முழுக்க
கத்திக் கலைக்கிறது
அண்டங்காகம்
விரட்டிக் கடிக்கிறது
விசர் நாய் ஒன்று
புரட்டிப் போட்டுப்
பிடுங்கி எடுக்கிறது புலி
சீறிப் படமெடுத்து
ஊறிய விஷத்தை
உயிரில் துப்புகிறது நச்சரவம்
இன்னும்,
எத்தனை காலம்
இத்தனை கொடுமை..
இக்கணமே வருக
இஸ்ராயீலே....
0
No comments:
Post a Comment