Monday, November 4, 2024

உயிர்த்தல்

 உயிர்த்தல்


காலம் கௌவிக் கொண்டு வந்து
காலடியில் போட்ட
கவிதை இது.
குற்றுயிராய்க் கிடக்கிறது
குனிந்து தூக்குகிறேன்.
செதுக்கிச் செப்பம் செய்து
சிறகுகளும் சேர்க்கிறேன்.
தமிழ் உளியால்
விழி திறந்து
ஆன்மாவை அதற்குள்
ஆழமாய் ஊதுகின்றேன்..
ஆஹா,
அற்புதப் படைப்பாய்
அந்தரத்தில் சிறகடித்து
அது பறக்கின்றது.
அந்த அழகில்
உயிர்க்கின்றேன்..
O

மாதவம்

 மாதவம்

கவிதைகள் வற்றிய
குளத்தில்
யாருக்காக தவமிருக்கிறேன்..
பறவைகள் பறக்காத வானத்தில்
ஏனோ வலை விரிக்கின்றேன்
துண்டு நிலாவை முறித்து
வானம் முழுவதும்
வரைந்த வசனங்கள் வாடுகின்றன
வரவில்லை நீ.
என்றாவது வந்து
வாசிப்பாய் என்று
கவிதையைப் போர்த்திக்
கண்ணுறங்குகின்றேன்
வா..வா
வந்து
என்னைக் கொத்திக் கொண்டு செல்..
o
தீரன் 2024