Monday, April 25, 2022

வாழ்த்துக் கவிதைகள்

 ஏ எச்.ஏ. பஷீர்

  ஊராளும் உடையாரின் உத்தமத் திருமகனாய்

பிறந்து

சீராளும் குணத்தாலே பேராளும் பண்பாலே

உயர்ந்து

ஆராயும்  குணத்தாலே  ஆய கலைகள்பல

கற்று

யாராலும் முடியாத  சாதனைகள் செய்தீர்

வாழ்க நீர்....

 

நிறைவுறும் சேவை புரிந்தொரு சாதனை

செய்தே

தகவுறு அதிபர் மகிழ்வுறு தினமிது

நன்னாளில்

அகமிது மகிழுது  கல்புகள்  கனியுது

ஆயினும்

பிரிவது எண்ணி மனமது கலங்குது

இந்நாளில் ...

 

யார்க்கேனும் தீங்கேதும் செய்திடா  நற்குணம்

பணிகளில்

மேற்கொண்டு எண்ணரிய நற்சேவை புரிந்து

பாளிகாவை

பார்க்கின்று மகுடமென ஆக்கிய பஷீர்-அதிபர்

மணியென

பேர் கொண்டு சிகரம் தொட்டுச் செல்கின்றீர்

நீர் வாழ்க..

 

வகுப்பறைக் கட்டுமானம் பகுத்தறிவு நூலகம்

தொடக்கம்

பகுப்பறிவு விஞ்ஞானக் கூடம் மைதானம்

மற்றும்

தொகுப்பறிவு நூலகம் வரையும் வியத்தகு

சேவைகள்

நிகழ்த்தியே விருத்திகள் செய்தீர் வாழ்க

வாழ்கவே ....

 

00

எஸ். நஜிமுடீன்

எழுகிற தமிழில் பழகிற சொல்லில்

விழுகிற வரிகள் கொண்டு

புதுவிதக் கருத்தில் விதவித மாகத்

தருகிற  கவியிவர் வாழி....!

பலவிதக் கருக்கள் பொழிகிற திறத்தில்

அழகுறு பாக்கள் ஆகிப்

பொழிகிற கவிமழை தனியொரு ரகத்தில்

புகழுறு படைப்பென  வாகி

புகழ்மிகு புலவரின் பரம்பரை வழியில்

கவிதரும் மருத்துவர் பாரீர்

சுடர்மிகும் அறிவும் அழகுறு முகமும்

இவரது உருவெனக் காணீர்

மொழிவது தமிழாம் மலர்வது கவியாம்

வழியது இசுலாம் ஆகி

விழியெனத் தமிழ்ப்பணி விருப்புட னாற்றி

மொழிதிறன் பெற்றீர் பேறு ...!

௦௦௦

ஏ.எல்.எம். சலீம் சேர்

கூர்க் கொண்ட அறிவுமதி ஆர்க்கின்ற நெஞ்சுறுதி

பார்க்கின்ற அறிவுமதி சிரிக்கின்ற அன்புரிமை

நேர்க்காணும் போதினிலே நெஞ்சுநிறை நட்புரிமை

மேற்காணும் குணமெல்லாம் சலிம்சேரின் தனியுரிமை

 

உயர்குணம் படைத்தவர் உண்மையாய் வாழ்ந்தவர்

உயர்நிர்வாகத் துறையினில் ஊரை உயர்த்தியவர்

துயர்களைத் தாங்கித் தூரநோக்குடன் சேவைகளில்

செயல்வீரனாய் செப்பம் செய்து செதுக்கியவர்.

 

நலிந்தோரின் நல்வாழ்வு நலனோம்பும் திட்டங்கள்

பொலிவுறச் செய்தவர் பெருமை பெற்றுயர்ந்தவர்

அழிவு தந்த சுனாமியால் அல்லலுற்ற மக்களுக்காய்

பொலிவேரியன் கிராமத்தை வயலோரம் வளர்த்தவர்.

 

கவினுறும் கலைகள் கலாசாரம் உயர்ந்திட

கலாசார அதிகார சபையினை அமைத்தவர்

கறையேதும் படிந்திடாக் கரங்களைக் கொண்டவர்.

இறையோனின் அருளதுபெற்று இனிதாக வாழ்கவே..

 

ஆற்றிய சேவைகள்  ஆயிரமாய் சாதனைகள்

போற்றியே பொன்னால் பொழிவதும் உண்மையே

ஏற்றியே வாழ்தினோம் இதயத்துள் இருத்தினம்

ஏந்தினோம் இருகரம் இறையிடம் கருணைதேடி.

00

திரு.இளையதம்பி குருநாதன்

பணி நயத்தற் பா

கூர்க்கொண்ட அறிவுமதி ஆர்க்கின்ற நெஞ்சுறுதி

பார்க்கின்ற கூர்விழி சிரிக்கின்ற அன்புரிமை

நேர்க்கானும் போதினிலே நெஞ்சுநிறை நட்புரிமை

மேற்காணும் குணம்யாவும் குருநாதன் தனியுரிமை

௦௦

உயர்குணம் படைத்தவர் உண்மையாய் வாழ்ந்தவர்

உயர்தபால்த் துறையினில் பதவிகள் உயர்ந்தவர்

துயர்களைத் தாங்கி தூரநோக்குச் சேவைதனில்

செயல்வீரனாய் செப்பம் செய்து செதுக்கியவர்

௦௦

பொதுமக்கள் மகிழ்வுக்காய் நலனோம்பும் சேவைகள்

பொலிவுறச் செய்தவர் பெருமை பெற்றவர்

புதுவிதமாய் திணைக்களம் புத்தாக்கம் பெற்றிடவே

புதுரத்தம் பாய்ச்சி புதுவிதம் கண்டவர்

௦௦

விளையாட்டு வீரராய்  வித்தகராய் விற்பன்னராய்

அழகியல் கலைகளில் ஆக்கங்கள் ஆக்கியவராய்         

மாணவர் தலைவராய் தொண்டர் ஆசிரியராய்

ஊருக்காய் பொதுச்சேவை புரிந்தாரே தியாகியாய்

௦௦

ஆற்றிய சேவைகள் ஆயிரமாய் சாதனைகள்

போற்றியே பொன்னால் பொழிவதும் உண்மையே

ஏற்றியே வாழ்த்தினோம் இதயத்துள் இருத்தினம்

இறையவன் அருள்பெற்று இனிதாக வாழ்கவே,,,!

௦௦௦௦௦

ம்.எம்.எம். நூறுல் ஹக்

தீய்க்கின்ற கண் கொண்டு  ஆர்க்கின்ற சொற்கொண்டு

ஆர்க்கேனும் அஞ்சாத  போர்க்குணம் கைக்கொண்டு

பார்க்கின்று நூலொன்று  படைத்தின்று நிற்கின்ற –நூருல் ஹக்கென்ற எழுத்தாளன் நீ வாழ்க

--

சீர்கெட்டுப் போகட்டும்  சிறிலங்கா அரசியல் - என்று

மார்தட்டும் பேர்கட்கு உளிதீட்டும் உன் பேனா

பாயட்டும் பற்பல திசைகட்கும்

பேரெட்டும் எழுத்தாற்றல்

திக்கெட்டும் எட்டிப் பரவட்டும் வாழ்க

--

நெடுநிலக் குடியேற்றம் சுடுதணல் வெளியேற்றம்

வட நிலப் பெருஞ்சமர் தொடர் நிலப் போரியல்

தருமிடர் துயரெல்லாம்-கற்றாய்ந்து

தொடரிதைத் தொகுத்தாய்  நீவாழ்க

--

பாராளச் சென்ற போராளர் நிலையை

ஊராள வந்த பேராளப் பேய்களை

ஒராளாய்த் தனி நின்று ஓர்மையுடன்

வீறான எழுத்தாலே விளாசுகின்ற

பேராளும் எழுத்தாளன்– நூறுல்ஹக்கே –நீ

சீராளும் திறத்தோடே வாழ்க...வாழ்க..

௦௦

 

 

No comments:

Post a Comment