Monday, September 30, 2024

பாவ வண்டி

 பாவ வண்டி

 

எத்தனை காலமாய்

இழுத்து வருகிறேன்

மேடு பள்ளம்

குன்று குழி

ஏறி இறங்கி...

 

பாவி ஊர்ந்து வருகிறேன்

பரமன் வாசலுக்கு

இந்தப் பார வண்டியுடன்.

எத்தனை மூட்டைகள்

எந்தன் முதுகில்..

 

பாவப் பாரம் அழுந்தி

பாதி மடங்கிய உடம்புடன்

ருக்கூவில் குனிகிறேன்..

 

சுமையை இறக்கிச்

சுகம் பெறச்

சுஜூதில் விழுகிறேன்

 

யா.. ஒபூருள் வதூத்!

0

 


முதுசொம்

 

முதுசொம்

 

நல்லதொரு மரம் இது

மகளே..

 

முறித்து முழுவதையும்

எறிந்து விடாதே,

முற்றத்தில் நிழல் தந்து

முதுமையில் வாழ்கிறது

 

தறித்து விடாதே மகளே

விலங்குகளும் பறவைகளும்

தரித்து நின்ற தங்குமடம்..

வெறுத்து விடாதே மகளே,

 

வெகு காலம் உன்னை

வளர்த்த விருட்ஷம் அதை.

கரித்தும் விடாதே கண்ணே,

கண்போல உன்னைக்

காத்த கற்பகம்..

மரித்த பின்னும்

மனதில் வாழும் மந்திரம்.

 

பிறப்பிலும் இறப்பிலும்

உனக்காக வாழும்

உன்னத ஜீவன் அது

 

உனக்கு

உயிர் ஊற்றிய அதற்கு

நீ நீரூற்று...

O

 

அடங்க மறு

 

 அடங்க மறு

 

சிரம் பணிக...

கட்டளை பிறக்க-

 

நான் நெருப்பு

மண்ணுக்குப்

பணிய மாட்டேன்

நான் உயரம் நோக்கி

எழுந்து எரிபவன்

 

மண்,

தாழ்ந்து கிடக்கும் வஸ்து

என் சிரம் பணிவது

ஒருவனுக்கே அன்றி

மண்ணுக்கு அல்ல..

 

குதர்க்கம் புரிந்து

சாபம் பெற்று,

விரட்டப்பட்டு வீழ்ந்தது.

வாழ்நாள் முழுவதும்

வரம் பெற்று வாழ்கிறது.

 

அடங்க மறுத்தலின்

அதி ரகசியம்

ஆரறிவர்?

0