Wednesday, May 28, 2025

பயணியின் பாடல்

 பயணியின் பாடல்

==============
தருவே,
நீ
தருகின்ற நிழலில்
தரித்து நிற்கின்றேன்
தற்காலிகமாக
விருட்ஷம் நீ
வெயிலில்தான்
விரிகுடையாக நிற்கின்றாய்
பயணி நான்
சற்று வெயில் சாய்ந்ததும்
சென்று விடுவேன்
நிரந்தரமாகத்
தங்க வரவில்லை
நிழல் தந்த உனக்கு நன்றி.
தொலைதூரப் பயணிகளும்
தொடர்ந்து வருவர்
தொல்லை என எண்ணாது
தொடர்கிறாய் உன் சேவையை
தகிக்கும் இந்த தணலில்
நிற்கும் உனக்கு நிழல்
தருவது யார் தருவே...
O
தீரன்

உதிர் காலம்

உதிர் காலம்
===========
முற்றத்தில் நிற்கிறேன்
இனி
முறிந்து விடுவேன்..
முதிர்காலம் இது
இலை உதிர்காலம்
எதிர்காலம் இனியேது
சுற்றமெல்லாம் செல்லரித்து
இற்றுப் போய் நிற்கிறேன்.
என் நிழலில்
இளைப்பாறியவர்கள் எங்கே?
என் கிளைகளில்
பாடி ஆடிய பறவைகள் எங்கே?
ஆணி வேர் அறுந்து
கூனி நிற்கிறேன்
கூப்பிட ஆருமில்லை..
பட்ட மரம் தன்னைக்
கட்டியணைத்து ஒரு
சொட்டுக் கண்ணீர் மல்கி
முத்தமிட யாருளர்?
முற்றத்தில் நிற்கிறேன்..
இனி முறிந்து விடுவேன்..
O

தீரன்.. 

Tuesday, March 25, 2025

காலப் பூச்சி

 காலப் பூச்சி

==========
வானமெங்கும் இத்தனை
வண்ணங்களை வீசிப் பறந்த
அந்த விசித்திரப் பூச்சி எது?
ஓரத்து வானத்தில்
நெருப்புக் குச்சியைக்
கிழித்துக் கொளுத்தி
வர்ணக் கூடு கட்டி,
கிழக்கில் சூரிய முட்டையிட்டு
மேற்குக்கு உருட்டி வந்து
அடை காப்பதுவும்,
காலை மாலை என
இரு வர்ணச் செட்டைகள் அடித்துப்
பறந்து செல்வதுவும்....
இந்தக்
காலப் பூச்சி ஆடும்
கண்ணாமூச்சி விளையாட்டுக்கு
ஓர் அளவில்லை..
O

பாவக் காய்கள்

 பாவக் காய்கள்

--------------
எத்தனை பாவக்காய்கள்
எந்தன் தோட்டத்தில். .
அறியாது நீரூற்றித்
தெரியாது உரம் இட்டுப்
புரியாமல் வளர்த்து
விட்டதன் விளைவாய்,
முற்றி விளைந்து
சுற்றிப் படர்ந்து
என் தோள்களை
அழுத்தும் இந்தப்
பாவக்காய்கள்
வெட்டி எறிந்து
தோட்டத்தை
வெட்ட வெளியாக்கிட
ஒட்ட நறுக்கி
ஒட்டு மொத்தமாய் விசிறி விட
அந்தப்
பாவநாசினி
எந்தக் கடையில்..?
O
தீரன்..

Saturday, February 8, 2025

அழகிய அழைப்பு

 

அழகிய அழைப்பு

 

என் உலகத்துக்கு வாருங்கள்

பூக்களால் ஆன ஒரு

புன்னகை தருகிறேன்..

 

கைகள் கொள்ளும் அளவுக்கு

கவிதைகள் தருகிறேன்..

 

இன்னும்

பை நிறைய

பாடல்களும் தந்து

இதயம் மகிழ

இசைத்தும் காட்டுவேன்.

 

மாயக்கரம் ஒன்று

மர்ம வலை வீசி என்னை

மறைத்திடும் முன்...,

 

என்

உலகத்துக்கு  வாருங்கள்..

நல் ஆத்மாக்களே..

O

Sunday, February 2, 2025

கவிதைத்தானம்

 

கவிதைத்தானம்

 

என்

முற்றம் முழுவதும்

இறைத்திருக்கிறேன்

என் கவிதைகளை

 

சுற்றம் சூழ வருக

குருவிகளே..

 

சற்றும் விடாது

கொத்திச் செல்லுங்கள்

குற்றம் சுமத்தி

என்னைப்

பற்றறுத்துப் பிரிந்தவளுக்குப்

பாடல் இனி இல்லை.

 

காலக்

கூற்றவன் வந்தென்

கழுத்தைப் பற்றும் வரை

எழுதியவற்றை எறிவேன்

முற்றம் முழுக்க...

 

ஓ.. சிட்டுக் குருவிகளே,

வந்துங்கள்

அலகு நிறைய

அள்ளிச் செல்லுங்கள்..

 

அடுத்த முறை

வந்தால்

எனக்காக நீங்கள்

அஞ்சலிக்கவும் கூடும்.

 

இப்போதே,

இற்றை வரை நான்

இயற்றியவற்றைச்

சுற்றி எறிகிறேன்

 

பற்றிச் செல்க

என் சிட்டுக்களே..

O

தீரன்..

 

தனிமைத் தீ

 

. தனிமைத் தீ

 

வெறிச்சோடிக் கிடக்கிறது

என் வானம்

 

கானம் இசைத்த காற்றைக்

காணவில்லை என்று..

மேகம் சுமந்து பொழிந்த

 

கவிதை மழை

ஓய்ந்து போனதின்று..

சாய்ந்தமருது முழுவதும்

காய்ந்து போய் கிடக்கிறது..

முற்றும் என்று நீ

 

முகம் மறைத்ததில், என்

முற்றம் முழுவதும்

வற்றிப் போனது..

 

மோகனம் பாடிய குரல்

இன்று

கானகம் ஏகியதால்

வானகம் எல்லாம், வீணே

வெறிச்சோடிக் கிடக்கிறது.

 

தனிமைத் தீ

என்னைத்

தின்று கொண்டிருக்கிறது.

O

 

இடி விழுந்த கதை

 

இடி விழுந்த கதை

 

எதற்குச் சொன்னாய்

அந்தக் கதையை...

 

மூச்சு முட்டி

விழிகள் வெறிச்சிட்டு

விண்ணைப் பார்க்கவும்

 

கவிதைகளுக்கு

கபன் இட்டுப் போர்த்தவும்

 

தொண்டைக்குள்

கபுருக் குழி தோண்டவும்

 

நெஞ்சம் முழுவதும்

மஞ்சிப் பலகை மூடவும்

 

அன்பை இறக்கி

அடக்கம் செய்து,

எனக்கி நானே

தல்க்கீன் ஓதவுமா...

 

அந்தக் கதையைச் சொன்னாய்

அன்பே..

O