ஏவும்கணைகள்
ஏவுகணைகள்
ஆகாயத்தில் தாவுகணைகள்
அந்தச் சாவுகணைகள்
இனியும் வேண்டாம்..
கண்டம் விட்டுக்
கண்ட மேவுகணைகள்
ஏவுதல் வேண்டாம்
உயிர்களைச் சீவுகணைகள்
உருவாக்குதல் வேண்டாம்
கனிமருந்து காவுகணைகள்
கண்டிப்பாக வேண்டாம்
பூவு கணைகள் செய்க..
பூக்களால் நிரப்பி ஏவுக..
அவை
அன்பு சுமந்து வந்து
பூமியில் விழுந்து வெடித்துப்
பூக்கள் எங்கும் சிதறட்டும்
புதிய பூமி மலரட்டும்.
O
59. மாயக் குதிரை
திமிறிக் குதிக்கிறது
என்னைத்
திட்டித் தீர்க்கிறது
கடிவாளம் பிடித்திழுக்க
கடிதில் அடங்காமல்
பிடிவாதம் பிடிக்கிறது
பிடிக்குள் அடங்கவில்லை
மூக்கனாங் கயிறிட்டு
முழுமூச்சாய் இழுக்கிறேன்
போக்கணம் காட்டி,
போகிறது..எங்கேயோ..
லாயத்துள் அடைக்கவும்
லாயக்கில்லை எனக்கு
துள்ளிக் குதித்து
தூக்கி எறிகிறது
பொல்லாத
மனமென்னும் இந்த
மாயக் குதிரை..
O
58..நினைவுப் பெருங்கழுதை
கடிவாளம் பிடித்து
இழுத்து வருகிறேன்
பிடிவாதமாய்ப்
பின்னால் வருகிறது
முடிவிலாத நெடும்பாதை
இடைவிடாது தொடர்கிறது.
இளைப்பாறவில்லை..
கடினமான பயணம்
கரடுமுரடுகள் தாண்டிக்
கூப்பிடாமலே,
கூடவே வருகிறது.
கடிந்து துரத்த
முடியவில்லை
பயணமும்
முடிந்த பாடுமில்லை
அடுத்தடுத்து
அடியெடுத்துத் தொடர்கிறது
இந்த
நினைவு என்னும்
பெரும் கழுதை.
O
No comments:
Post a Comment