பொன்னாடை போர்த்துக ஒரு பொற்கிழியும் தந்திடுக
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
குன்னென்ற சொல்லால்
குவலயங்கள் படைத்தளித்தானே ..வல்லவன்
எல்லாமுமாய் காட்சி
தரும் அவன் திருக் காட்சியை
என்னென்பேன் அவன் பெரும் மாட்சியை...
அவன் புகழ் ஓதுவோம் ...
௦௦
தங்கத் தலைவர் தமிழ்த் தென்றல் - அவர்
சந்தக் கவிதைபாடும் ஒரு சந்தனத் தென்றல்- அவர்
சங்கப் புலவர் வழிவந்த இன்பத்தமிழ்த் தோன்றல்..
அன்னவர் முன்னால்
எடுத்துச் சில பாட்டு
தொடுத்துக் கோர்த்து,,அடுத்தடுத்துப் பாட வந்த
அன்புத் தோழமைகள் அனைவருக்கும்///
பார்த்து ரசித்துப் பாட்டு ருசிக்க
சேர்த்து வந்த சபையோரே அனைவருக்கும் --
சாந்தி சமாதானம் ...நிலவுக ...
இன்னும்
பாக்கு நீரிணை கடந்து
இலங்கையைப்
பார்க்க வந்த தமிழகத்தின்
பாவலர்களே
உங்களை
பார்க்கப் பேசப் பழக –உங்கள்
பாக்கள் கேட்க ஆவல் மிகக் கொண்டோம்
வருக எங்கள் நாட்டின்
வாசலெங்கும் வண்ணத் தமிழ் மழை பொழிக...
. ௦
இங்கு
சந்தக் கவிஞரும் அந்தக் கவிஞரும் இந்தக் கவிஞரும்
என்- சொந்தக் கவிஞரும் உள்ளார்கள்..ரெண்டொரு
பந்தக் கவிஞரும் பதுங்கி இருக்கின்றார்..
எந்தக் கொம்பர் இருந்தால்
எனக்கென்ன .. எனக்கென்ன.
நான் தீரன்.. கவிகளில்
சூரன்..
கதைகளில் வீரன்...சொந்த
ஊரன்..
ஒரு கவிதை தாரன்..
சுவைத்துப் பாரன் ...
௦௦
பொன்னாடை போர்த்துக –ஒரு
பொற்கிழியும் தந்திடுக,,,,,,
கண்ணான மனையாள்
கனநாளாய் கத்துகிறாள்
கண்ணீராய்ச் சிந்துகிறாள்
கடிந்து மிக வுரைக்கின்றாள்
பெண்ணான நானுமக்கு
பொன்னாக வாய்த்தேனே
என்னானது என் வாழ்வு
வீணானது நானாவது
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன் – என்று
உண்ணாமல் உறங்காமல்
உம்முடனே வாழ்கின்றேன்-நீரோ
தன்னானா பின்னானா என்று
பண்ணான பாட்டெல்லாம்
படிக்கின்றீர் கிழிக்கின்றீர்
ஐயோ..ஐயோ... உமக்குப்
பொன்னாடை ஒன்றில்லை
போர்த்தத்தான் ஆளில்லை
பொற்கிழியும் தானில்லை
௦௦
இன்னா நேற்று எழுதியவன்
அன்னா பாரும் அவனும் இவனும்
மின்னா மல் முழங்காமல்
என்னா பரிசெல்லாம் வாங்குகிறான்.
ஐயோ..ஐயோ...இதைச்
சொன்னா உமக்குக்
கோபம்...மட்டும்
முன்னால் மூக்கில் வருகிறது....
௦௦
கன்னாபின்னாக் கவிஞரெல்லாம்
பொன்னாடைக்குள் புகுந்து
புகைப்படத்தில்
சிரிக்கையில்
கண்ணாளாய் கவிபாடும்
கவிஞன் நானென்று
பீற்றுகிறீர்....பெருமையாகச்
சாற்றுகிறீர்...தமிழைப்
போற்றுகிறீர் உமக்குப்
பொன்னாடை போர்த்த
ஒரு ஆள்தானில்லை...
பொற்கிழி தரவும் வக்கில்லை.
௦௦
சாதியம் எழுதினவனுக்கு
சாஹித்திய விருதாம்
பாலியல் பாடியவனுக்கு
பாராட்டுப் பத்திரமாம்
செத்தவனை புகழ்ந்தவனுக்கு
செக்கும் காசுமாம்
நிண்டவன் கண்டவனுக்கும்
நினைவுச் சின்னமாம்
ஹையோ..ஹையோ...
என்னதான் கிழிக்கின்றீர்
எலி போல
முளிக்கின்ரீர்-ஒரு
பொன்னாடைக்கும் வக்கில்லாத
பன்னாடை புலவர்தான்
நீர்....
௦௦
என்றெல்லாம் எந்தன்
கண்ணான மனையாள்
கனநாளாய் கத்துகிறாள்
கண்ணீராய்ச் சிந்துகிறாள்
கடிந்து மிக வுரைக்கின்றாள்
௦௦
–இந்தப்
பெண்ணாளின் பிதற்றலை
என்னான்னு சொல்வேன்
பொன்னுக்கும் பொருளுக்கும்
பண் எழுதாத பாவலன் நான் என்று
எப்படிச் சொல்வேன்...?
௦௦
கண்ணாழரே... கணவரே...
மன்னவரே மறை கழண்டவரே..
சொன்னால் கோபிக்க மாட்டீரே...
சொல்கிறேன்...ஒரு விஷயம்
௦௦
என்னாது சொல்லு
என்னவோ எல்லாம்
சொன்னாய்...இதையும்தான்
சொன்னால் கேட்பேன் சொல்லேன்..
௦௦
கண்ணாளா உமக்குக்
கன்-நாளா
கண்ணும்
மங்குது...இப்போ ஒரு
மண்ணும் தெரிவதில்லை...
இதை வெச்சு
பண்ணான பாட்டொன்று எழுதும்
அண்ணாமாரே.. அண்ணாமாரே...
கண்ணாஸ்பத்திரிக்கு போய்-நானும்
கண்சிகிச்சை செய்ய வேணும்-மூக்குக்
கண்ணா டியும் மாட்ட
வேணும்
வண்ணா னுக்குக் கொடுக்கவும்
வசதியில்லை... உண்ணா
மல் விட்டு
ஒரு கிழமையாச்சு
பொன்னாய்க்கொடுக்கும் புரவலரே
பொருள் கொடுக்க மாட்டீரோ...
இந் நாய் இரந்து கேட்கின்றேன்
வீணாய் இறந்த பின்தான்
வாழ்த்த நீரும் வருவீரோ..?
௦௦
என்றொரு பாட்டெழுதி
போடுமையா புலவரே..கணவரே...
பேஸ்புக்கில் பேப்பர்களில்...
௦௦
பாவப்பட்டு யாரேனும்
பொன்னாடை போர்த்தியொரு
பொற்கிழியும் அளிப்பாரெனில்- அப்
பொன்னாடை உமக்கு –அந்தப்
பொற்கிழி எனக்கு, --ஆஹா....
பொன்னாடை உமக்ககே –அந்தப்
பொற்கிழி எனக்கே.,
௦௦
மிக்க நன்றிகள் சபையோரே...
வஸ்ஸலாம் .....
No comments:
Post a Comment