Sunday, March 29, 2026

கூவல், சேவல்

கூவல், சேவல்
============
தடாரித்து எழுந்து
இறக்கை அடித்துக் கொக்கரித்து
ஏன் கூவுகிறாய் சேவலே..
ஈரானின் ஏவுகனைகள் வானில்
சீறிச் செல்வதைப் பார்த்தாயோ
ஈமானிய மலக்கு ஒன்று வந்திங்கு
இறங்கி வருவதைக் கண்டாயோ
நூறானியாப் பள்ளி மோதின் இன்னும்
சுபஹுக்கு வரவில்லை என்றா
உரத்துச் சொல்லுகிறாய்..
ஊரானின் கோழி திருடி
உம்மா பேரில் கத்தம் ஓதும்
மீரானின் அடாச் செயல் அறிந்தாயோ சேவலே
தடாரித்து எழுந்து
இறக்கை அடித்துக் கொக்கரித்துக்
கூவுகிறாய் என் சேவலே..
0
தீரன்.

வயல் பாட்டு

 வயல் பாட்டு

==========
வயல்வெளி எங்கும் நடந்து திரிகிறேன்
பக்கத்தே ஓடி வரும்
வக்காத்துக் குளம் உன்
பெயர் சொல்லிப் பாய்கிறது
வக்காப் பறவை ஒன்று
உன் விலாசத்தை விசாரிக்கின்றது
பொட்டுப் பூச்சி ஒன்று
உன் போட்டொ கேட்டு
பக்கத்தில் வருகிறது
நாரை ஒன்று
உன் நம்பர் கேட்டு
நச்சரிக்கிறது
புறாவுக்கு உன்னுடன்
பேச வேண்டுமாம் என்று
புறுபுறுக்கிறது
தூர விலகுங்கள் பட்சிகளே
என்னவள் எனக்கு மட்டுமே
என்று நடக்கிறேன்
பைத்தியமோ இவன் என்று
கொக்கு ஒன்று
கொடுப்புக்குள் சிரிக்கிறது.
O
தீரன்

மழைக்கள்ளன்

 மழைக்கள்ளன்

--------------
இருளடைந்து கிடக்கிறது
என் வானமெல்லாம்
காயப்போட்ட வானவில்லைக்
காணவில்லை
களவு போய் விட்டது..
சூரியனையும்
சுருட்டிக் கொண்டு
சென்று விட்டதும் யாரோ..
மின்னொளி பாய்ச்சி
விழிகளைக் குருடாக்கி
ஒரு நட்சத்திரம் விடாமல்
அள்ளிச் சென்ற கள்வன் எங்கே..
சந்திரனைக் கடத்திச்
சாகடித்தவன் எவன்..
குளிர் போர்வையை வீசி
குவலயத்தை மறைத்துக்
கொள்ளையடித்துக்
கொண்டோடிய
அந்த 'மழை'க்கள்ளன்
அகப்படுவானோ..?
O
தீரன்

பயணம்

 பயணம்

=======
நெடுந்தூரம் கடந்து
நெருங்கி விட்டேன்
இனி
இறங்கி விடுவேன்
கடுகதியில்
கடந்து விட்டேன்
படுவேகமாய்
பயணித்து விட்டேன்
ஓடுகிற வண்டி இனி
ஓய்ந்து விடக்கூடும்
சடுதியில் ஓரிடத்தில்
சாய்ந்தும் விடலாம்
கிடைத்தவரை பயணம்
வந்து விட்டேன்
வண்டியின் எந்திரம்
வேகம் குறைகின்றது
நின்றதும்
கிட்டடியில்
இறங்கி விடுவேன் தோழர்களே..
O
தீரன்