Tuesday, February 3, 2026

காலங் கொத்திப் பறவை

 

காலங் கொத்திப் பறவை

 

என் காதலைக்

கௌவிப் பறந்த

காலங் கொத்திப் பறவையே,

 

ஒன்றை தெரிந்து கொள்..

எத்தித் திருடிச் சென்று

என் காதலைக்

கொத்தித் தின்ற

பாவத்தால்,

 

ஒவ்வொன்றாக உன்

சிறகுகள் உதிர்ந்து

மொட்டைக் காலம் ஆகி

நீ காலமாகி

விட்ட போதிலும்

 

என்

காதல் தந்த

நினைவுகள் அழியாது

என்னுடன் வாழ்ந்திருக்கும்

என்பதறியாய் நீ..

 

ஓ.. காலங் கொத்திப் பறவையே..

O

 

பாதயாத்திரை

 

பாதயாத்திரை

 

எத்தனை காலடிகள்

எடுத்து வைத்த பாதவடிகள்

 

எண்ணி நடக்கவில்லை

எண்ணியும் நடக்கவில்லை

 

பாவப் பாதையில்

பயணித்தவை எத்தனை

 

பள்ளிவாசலுக்கு சென்றவை

எத்தனை..

 

கடந்த காலத்தை

நடந்து கழித்தவையும்

தப்படி வைத்துத்

தடம் பதித்தவையும்

 

எண்ணி நடக்கவில்லை

எண்ணியும் நடக்கவில்லை

 

பயணம் முடிந்தது

பாதையும் முடிந்தது

 

பாதங்களின்றி வந்து

படுத்திருக்கிறேன்

பாவம், என்

பாதம்...

O

 

மண்மகள்

 

மண்மகள்

 

சந்திக்க வருவேன்

ஒரு தினம் உன்னை..

 

துணை யாருமின்றித்

தனியாக..

தயாராக நீ இருப்பாய்

 

படுத்துக் கிடப்பேன்

உன் மடிமீது

எடுத்து அணைப்பாய்

உன் மண் மேனி தழுவி..

 

அழுத்தி மூடும் உன்

கரத்தின் வெம்மையும்,

கொழுத்தி எரியும் உன்

இதழின் முத்தமும்

யாருக்கும் தெரியாது..

 

நெருக்கி அணைக்கும்

உன் நெஞ்சின் வேகம்

என் எலும்புகளை

முறிக்கும் என்பதும் அறியார்.

 

ஆ.,

நீ ஓர் அடக்கமான

பெண் அல்ல..

நான் அடக்கமான மண்.

O

மன்மத வண்டு

 

மன்மத வண்டு

 

ஓ., பொன்வண்டே,

எத்தனை சோலைகள்

கடந்து வந்தாய்

 

எத்தனை மலர்களில்

நடந்து வந்தாய்..

 

நீ தொட்டு வந்த மலர்களில்

தேன் சுரந்ததெத்தனை..

நீ பட்டு வந்த பூக்களில்

தேன் பருகாது

விட்டு வைத்ததெத்தனை?

 

உன் கட்டுடலில்

அவற்றின் மகரந்தங்கள்

பட்டுத்,

தம் கற்பினை இழந்த

கதைகள் அறிவாயோ?

 

அவை

கண்ணீரில் எழுதிய

கவிதைகள் புரிவாயோ?

 

ச்சே,

விட்டு விடு இந்த வேலையை

ஓரிதழில்

மட்டும் பருகி வாழுதல்

ஒண்ணாதோ உனக்கு?

O

 

Saturday, October 18, 2025

ஏவும்கணைகள்

 

ஏவும்கணைகள்

ஏவுகணைகள்

ஆகாயத்தில் தாவுகணைகள்

அந்தச் சாவுகணைகள்

இனியும் வேண்டாம்..

கண்டம் விட்டுக்

கண்ட மேவுகணைகள்

ஏவுதல் வேண்டாம்

உயிர்களைச் சீவுகணைகள்

உருவாக்குதல் வேண்டாம்

கனிமருந்து காவுகணைகள்

கண்டிப்பாக வேண்டாம்

பூவு கணைகள் செய்க..

பூக்களால் நிரப்பி ஏவுக..

அவை

அன்பு சுமந்து வந்து

பூமியில் விழுந்து வெடித்துப்

பூக்கள் எங்கும் சிதறட்டும்

புதிய பூமி மலரட்டும்.

O

 

 

59.  மாயக் குதிரை

 

திமிறிக் குதிக்கிறது

என்னைத்

திட்டித் தீர்க்கிறது

கடிவாளம் பிடித்திழுக்க

கடிதில் அடங்காமல்

பிடிவாதம் பிடிக்கிறது

பிடிக்குள் அடங்கவில்லை

மூக்கனாங் கயிறிட்டு

முழுமூச்சாய் இழுக்கிறேன்

போக்கணம் காட்டி,

போகிறது..எங்கேயோ..

லாயத்துள் அடைக்கவும்

லாயக்கில்லை எனக்கு

துள்ளிக் குதித்து

தூக்கி எறிகிறது

பொல்லாத

மனமென்னும் இந்த

மாயக் குதிரை..

O

 

58..நினைவுப் பெருங்கழுதை

கடிவாளம் பிடித்து
இழுத்து வருகிறேன்
பிடிவாதமாய்ப்
பின்னால் வருகிறது

முடிவிலாத நெடும்பாதை
இடைவிடாது தொடர்கிறது.
இளைப்பாறவில்லை..

கடினமான பயணம்
கரடுமுரடுகள் தாண்டிக்
கூப்பிடாமலே,
கூடவே வருகிறது.

கடிந்து துரத்த
முடியவில்லை
பயணமும்
முடிந்த பாடுமில்லை

அடுத்தடுத்து
அடியெடுத்துத் தொடர்கிறது
இந்த
நினைவு என்னும்
பெரும் கழுதை.
O